இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புட் பெங்களூர் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை பாராட்டிப் பேசியுள்ளார்.
மிகவும் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகிறது.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல அணியாக திகழும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று மற்ற அணிகளுடன் சண்டை செய்து வருகிறது.

இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு அணி சிறப்பாக செயல்படுவதற்கு உதவியாக இருந்த வீரர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புட் செய்தியாளர்கள் சந்திப்பில் பெங்களூர் அணி சிறப்பாக செயல்படுவதற்கு காரணமாக திகழ்கிற ஹசரங்கா மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களை பாராட்டிப் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், “பெங்களூரு அணியில் இடம் பெற்றிருக்கும் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர், ஐசிசி தரவரிசையில் இவர் முதன்மையான பந்துவீச்சாளராக திகழ்கிறார், அவரிடம் தனித்தன்மையான திறமை உள்ளது. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மிக சிறப்பாக செயல்படுகிறார், அவருடைய பந்துவீச்சை நாம் பார்த்தோமென்றால் அதில் ஒவ்வொரு பந்துமே விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது போலவே உள்ளது, பெங்களூரு அணிக்கு ஹசரங்கா ஒரு துருப்புச் சீட்டு போன்றவர் என்று பாராட்டியுள்ளார். மேலும் பெங்களூரு அணியில் ஹசல்வுட் இடம்பெற்றிருப்பது பெங்களூரு அணியின் பந்துவீச்சுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது என்றும் லால்சந்த் பேசியிருந்தார்.
அதேபோன்று பெங்களூரு அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய லால்சந்த், கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் தடுமாறியது தினேஷ் கார்த்திகிர்க்கு பெங்களூர் அணியில் நல்ல ஒரு ரோல் கிடைத்துள்ளது, தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தினேஷ் கார்த்திக் மிகவும் ரசித்து விளையாடுகிறார், இதேபோன்று சிறப்பான ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் லால்சந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.