பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விக்கு தோனி பாணியில் பதில் அளித்து அசத்திய ரோகித் சர்மாவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 497 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
அடுத்ததாக முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க வீரர்கள் டி காக் மற்றும் டீன் எல்கர் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், தென்ஆப்பிரிக்கா அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா அணி இழந்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. நாள் இறுதிவரை முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்தபிறகு டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி, முதல் முறையாக டெஸ்ட் அரங்கில் இரட்டை சதத்தை பதிவு செய்த ரோகித்சர்மா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது நிருபர் ஒருவர், “துவக்க வீரராக களமிறங்கி ஒரே தொடரில் இதுவரை நிகழ்த்திய அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டு இருக்கிறீரா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு தனது வழக்கமான கிண்டல் பாணியில் பதிலளித்த ரோகித் சர்மா, “வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் நமக்கு அமைவதில்லை. அதனால் கிடைத்த வாய்ப்பை நமக்காக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி ஒரு மனநிலையில் தான் நான் இந்த துவக்க வீரருக்கான வாய்ப்பை டெஸ்ட் போட்டிகளில் காண்கிறேன். போதுமானவரை எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். இல்லையேல் உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் எவ்வாறு கிழித்து தொங்க விடுவீர்கள் என எனக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு பேச முடிந்த வரை நான் வாய்ப்பு கொடுக்க விரும்புவதில்லை” என கிண்டல் அடித்தார். இதனால் அரங்கமே சிரிப்பொலியில் நிறைந்தது.
ரோகித் சர்மாவின் இந்த கலகலப்பான பத்திரிக்கையாளர் சந்திப்பை கண்ட ரசிகர்கள், இவர் தோனி பாணியில் பதிலளிக்கிறார்; இவரின் கிண்டலான பதிலளிப்பு தோனியை நினைவு கூறுகிறது என்றனர்.
Rohit Sharma's just playing with the media ??https://t.co/OEp1K5mRPt | #INDvSA pic.twitter.com/U4RriEEByS
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 20, 2019