மீண்டும் பழைய அப்ரிடியாக அவதாரம் எடுத்த ஷாகித் அப்ரிடி
காலம் காலமாக ஆடிவரும் அஃப்ரிடி, இன்னும் தனது ஃபார்மில் அதிரடியாக ஆடிக்கொண்டிருப்பது பெரிய வியப்புதான்.
அதிரடிக்கு பெயர்போன அஃப்ரிடி, தனது அதிரடியான பேட்டிங்கின் காரணமாக பூம் பூம் அஃப்ரிடி என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட அஃப்ரிடி, சில டி20 தொடர்களில் ஆடிவருகிறார்.
யுவராஜ் சிங், மெக்கல்லம் போன்ற வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களது இயல்பான ஆட்டத்தை டி20 லீக் தொடர்களில் ஆடமுடியாமல் திணறிவருகின்றனர். ஆனால் அஃப்ரிடி இன்னும் ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்சில் அசத்திவருகிறார்.
கனடா டி20 லீக் தொடரில் ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணியில் அஃப்ரிடி ஆடிவருகிறார். நேற்று இந்த அணிக்கும் டுப்ளெசிஸ் தலைமையிலான எட்மாண்டன் ராயல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ப்ராம்ப்டன் அணியின் தொடக்க வீரர் சிம்மன்ஸும் அஃப்ரிடியும் அடித்து நொறுக்கினர்.
சிம்மன்ஸ் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்ற வீரர்கள் பெரிதாக ஆடவில்லை. ஆனால் அஃப்ரிடி தனது பழைய ஆட்டத்தை ஆடினார். நேற்றைய ஆட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் இருந்த அஃப்ரிடியை பார்ப்பது போன்றே இருந்தது. அந்தளவிற்கு எதிரணியின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தார். 40 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து ப்ராம்ப்டன் அணி 20 ஓவர் முடிவில் 207 ரன்களை குவித்தது.
Watch @SAfridiOfficial hitting the ball out of the stadium with so much ease. Exciting atmosphere in the stadium..BOOM! #GT2019 #BWvsER pic.twitter.com/zxYersLyAz
— GT20 Canada (@GT20Canada) July 29, 2019
208 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய எட்மான்டன் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்ததை அடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் ப்ராம்ப்டன் அணி வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி 81 ரன்களை குவித்தது மட்டுமல்லாமல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய அஃப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.