வீடியோ; மாற்றி மாற்றி கேலி செய்து கொண்ட கோஹ்லி, டிம் பெய்ன்
பெர்த் டெஸ்ட் போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோஹ்லியும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்னும் மாற்றி மாற்றி கேலி செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, விராட் கோலியின் அபார சதம் மற்றும் ரஹானேவின் பொறுப்பான அரைசதத்தால் 283 ரன்கள் சேர்த்தது.
43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கினர். ஷமியின் பந்துவீச்சில் கையில் காயமடைந்து ஃபின்ச் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து ஷான் மார்ஷை 5 ரன்களில் ஷமி அவுட்டாக்கினார். அதன்பிறகு பெரிய பார்ட்னர்ஷிப் எதையும் அமைக்கவிடாத இந்திய பவுலர்கள், மார்கஸ் ஹாரிஸ், ஹேண்ட்ஸ்கம்ப் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை அவுட்டாக்கி அனுப்பினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் உஸ்மான் கவாஜா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவருகிறார். அவருடன் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் இணைந்து ஆடிவருகிறார்.
மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 41 ரன்களுடனும் டிம் பெய்ன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
A quick recap of an epic day's play between the skippers at the close of play.
Bring on day four! #AUSvIND pic.twitter.com/TIRY2eaYTS
— cricket.com.au (@cricketcomau) December 16, 2018
இந்நிலையில், இன்றைய நாள் ஆட்டம் நிறைவடைந்து வீரர்கள் பெவிலியின் திரும்பி கொண்டிருக்கும் போது, இந்திய கேப்டன் விராட் கோஹ்லியும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்னும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் அடித்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.