11வது ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் 11 நாட்களே(ஏப்.7) உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, சென்னை அணியின் கம்பேக், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தோனி, ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட பெரும்பாலான சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்டனர். தினம், அவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி, பவுலிங் கோச் லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோரின் மேற்பார்வையில், வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று (மார்ச் 26) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ‘CSKAPP’ எனும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கோர், டிக்கெட்டுகள், வீரர்களின் பேட்டிகள், பரிசுப் பொருட்கள் என பல அம்சங்கள் இந்த ஆப்-ல் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, ‘டியர் சிஎஸ்கே’ எனும் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு, அது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. அணிக்காக பிரத்யேக விளம்பரங்கள், ஸ்பெஷல் தீம் சாங் என வீரர்கள் செம பிஸி.
My exciting new journey with @ChennaiIPL starts today. Such a warm welcome ???? #IPL2018 #WhistlePodu pic.twitter.com/601E6pjUN3
— Shane Watson (@ShaneRWatson33) March 27, 2018
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், அணியில் இன்று இணைந்துள்ளார். தனது மனைவி லீ, மகள் மடில்டா, மகன் வில்லியம் என டோட்டல் ஃபேமிலியுடன் சென்னை வந்திறங்கிய ஷேன் வாட்சனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனக்கு அளித்த வரவேற்பை, நெகிழ்ச்சியுடன் வாட்சன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
This one is gonna be special! Stay tuned! #WhistlePodu?? pic.twitter.com/OBLzfTcwko
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2018
கடந்த ஆண்டு பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த ஷேன் வாட்சனால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. ஏன்…ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றிருந்த வாட்சன், இனி ஐபிஎல் தொடரிலும் ஆட மாட்டார் எனவே கருதப்பட்டது. ஆனால், தோனி இவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார். இப்போதும் வைத்திருக்கிறார். ஆதலால், தோனியின் சிபாரிசால் வாட்சன் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இதை நிச்சயம் வாட்சனே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தோனியின் நம்பிக்கை வீண் போகாது என்பதே நமது எண்ணமும் கூட… ஏனெனில், நடந்து முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில், வாட்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நிச்சயம், இது மனரீதியாக வாட்சனுக்கு பெரிய பூஸ்ட் தான்.