பென் ஸ்டொக்ஸ் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இல்லை என்று நன்றாக தெரிந்துதான் பிளேயிங் லெவனில் எடுத்து விளையாட வைத்தோம் என்று அதிர்ச்சிகரமாக தகவலை சொல்லியுள்ளார் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்.
கடந்த மார்ச் 31ஆம் தேதி 16ஆவது ஐபிஎல் தொடர் விமரிசையாக துவங்கியுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி.
டாசை இழந்த பிறகு சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 92 ரன்கள் விளாசி சர்ச்சையான முறைப்படி ஆட்டமிழந்து, 8 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மொயின் அலி 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த பிறகு பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.
பென் ஸ்டோக்ஸ் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார். இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாக சில போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசமாட்டார். அவருக்கு பிரச்சனை இருக்கிறது. குணமடைந்த பிறகு பவுலிங் செய்வார் என அதிர்ச்சிகரமான தகவல் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை கொடுப்பார் என்று எதிர்பார்த்தபோது, பென் ஸ்டோக்ஸ் இப்போட்டியில் 7 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இன்னிங்ஸ் முடிவில் சிஎஸ்கே அணி 178 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதை சேஸ் செய்த குஜராத் அணிக்கு கில் மற்றும் சகா(26) இருவரும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இதில் 63 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த வீரர்கள் ஆங்காங்கே பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது.
போட்டியை இழந்த பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், அறிமுக வீரர் பென் ஸ்டோக்ஸ் பற்றி பேசினார். அவர் கூறியதாவது:
“ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பு பென் ஸ்டோக்ஸ் உடல்நிலை குறித்து எங்களுக்கு தெரியும். அவரே ஃபோனில் அழைத்து கூறிவிட்டார். அவரது கடைசி டெஸ்ட் போட்டிக்கும் ஐபிஎல் போட்டி துவங்குவதற்கும் இடையே நிறைய நாட்கள் இருந்ததால் நல்ல ஓய்வு பெற்றார் பென் ஸ்டோக்ஸ்.
இருப்பினும் ஆலரவுண்டராக செயல்படும் அளவிற்கு முழு உடல்தகுதியை பெறவில்லை என்று தெரிந்துதான் களமிறக்கினோம். ஏனெனில் அவரால் பந்துவீச முடியவில்லை என்றாலும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை கொடுப்பார், அணியுடன் இணக்கமான சூழல் அவருக்கு கிடைக்கும் என்கிற நோக்கில் இறக்கினோம்.
பென் ஸ்டோக்ஸ் தலைசிறந்த வீரர். இது போன்ற ஓரிரு போட்டிகள் தவறு நேர்வதில் பிரச்சனை இல்லை. அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறோம். விரைவில் குணமடைந்து விடுவார் என்று எங்களுக்கு அறிக்கைகள் வருகின்றன. இன்னும் சில போட்டிகளுக்கு பிறகு நிச்சயம் பந்துவீச்சிலும் பங்களிப்பை கொடுப்பார். ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார்.” என்று பிளம்மிங் தெரிவித்தார்.