கடந்த சில போட்டிகளாக இந்திய அணிக்கு இது மிகப்பெரிய கவலையை தந்து வருகிறது என்று பேட்டியளித்திருக்கிறார் ராகுல் டிராவிட்.
டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி பலம்மிக்க தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணியுடன் டி20 தொடரில் விளையாடியது. இரண்டு தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. இத்தொடர்கள் முடிவுற்ற பிறகு, மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றது இந்திய அணி. துரதிஷ்டவசமாக இவர்களுடன் பும்ரா செல்லவில்லை. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
பும்ராவிற்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த மூன்றாவது டி20 போட்டிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். பும்ரா இந்திய அணியில் இல்லாததால் ஆசியக் கோப்பைத் தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இதனால் டெத் ஓவரை வீசுவதற்கு அனுபவமிக்க வீரர்கள் இல்லாமல் கடைசி ஐந்து ஆறு ஓவர்களில் தொடர்ச்சியாக 10 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்து வந்தது.
இதுகுறித்து விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்து இருக்கிறார். அவர் கூறுகையில், “இந்திய அணி பலம்மிக்க அணியாக இருப்பதற்கு பேட்டிங் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்படுவது தான். ஆனால் கடந்த சில போட்டிகளாக இந்திய அணிக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பது டெத் ஓவர்கள். டெத் ஓவர்களில் கட்டுக்கோப்பாக பந்தவீசுவதற்கு அனுபவமிக்க வீரர்கள் இல்லை. ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போன்ற பந்துவீச்சில் பலம்மிக்க அணிகளும் அவர்களது முன்னணி வீரர்களை வைத்துக் கொண்டு டெத் ஓவர்களில் சிரமப்படுகிறார்கள். இந்த பிரச்சனை இந்தியாவிற்கு மட்டும் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும் நாங்கள் இதை இப்படி பல உதாரணங்கள் காட்டி ஒதுங்கிக் கொள்ளவில்லை. தொடர்ச்சியாக அதை சரி செய்வதற்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து வருகிறோம். டி20 உலக கோப்பைக்கு முன்னதாக பு ம்ரா இல்லாதது பின்னடைவாக தான் இருக்கிறது. அதேநேரம் ஹர்ஷல் பட்டேல் ஒரு சில போட்டிகளில் ரன்களை வாரி கொடுத்து இருக்கிறார் என்பதற்காக அவரை டெத் ஓவர்களில் மோசமாக செயல்படுகிறார் என்று புறந்தள்ளிவிட முடியாது. விரைவில் பும்ராவிற்கு மாற்று வீரர் அறிவிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.” என்றார்