உலக லெவன் அணியை அசால்டாக காலி செய்தது கரீபியன் படை !! 1
உலக லெவன் அணியை அசால்டாக காலி செய்தது கரீபியன் படை

ஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் விண்டீஸ் கிரிக்கெட் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ‌ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அப்ரிடி விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிராத்வெயிட் கேப்டனாக உள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

உலக லெவன் அணியை அசால்டாக காலி செய்தது கரீபியன் படை !! 2

இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் எவின் லெவிஸ் 58 ரன்களும், சாமுவேல்ஸ் 43 ரன்களும், ராம்தின் 44 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. உலக லெவன் அணி பந்திவீச்சில் ரஷித் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதன்மூலம் உலக லெவன் அணியின் வெற்றிக்கு 200 ரன்களை இலக்காக வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயித்தது. இதையடுத்து உலக லெவன் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லூக் ராங்கி ஆகியோர் களமிறங்கினர். 2-வது ஓவரை ரசல் வீசினார், அந்த ஓவரின் 3-வது பந்தில் தமிம் ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார்.

உலக லெவன் அணியை அசால்டாக காலி செய்தது கரீபியன் படை !! 3

பத்ரி வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே ராங்கி டக் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், அந்த ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆனார். அதன்பின் ஷோயிப் மாலிக் களமிறங்கினார். பில்லிங்ஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரசல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 4 ஓவர்களில் உலக லெவன் அணி 16 ரன்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்தது. அவரைத்தொடர்ந்து திசாரா பெரெரா களமிறங்கினார்.

அதன்பின் உலக லெவன் அணியினர் நிதானமாக விளையாடினர். 8-வது ஓவரை பிரத்வெய்ட் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் மாலிக் ஆட்டமிழந்தார். அவர் 12 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் பெரெரா உடன், அப்ரிடி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்தது.

உலக லெவன் அணியை அசால்டாக காலி செய்தது கரீபியன் படை !! 4

சிறப்பாக விளையாடிய பெரெரா 28 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய அப்ரிடி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ரஷித் கான் களமிறங்கினார்.

பெரெரா 37 பந்தில் 61 ரன்கள் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் மிச்செல் மெக்லினகன் களமிறங்கினார். அதே ஓவரின் ரஷித் கான் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சந்தீப் லமிச்சானே களமிறங்கினார். மெக்லினகன் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். டைமால் மில்ஸ் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் உலக லெவன் அணி 16.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

உலக லெவன் அணியை அசால்டாக காலி செய்தது கரீபியன் படை !! 5

வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்களும், சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

 

Leave a comment

Your email address will not be published.