இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெயிலுக்கு ஒருநாள் போட்டிக்கான அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பையை அடுத்து இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட இருக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ஆகஸ்டு மாதம் 3-ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்தத் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை கடந்த ஞாயிறு அன்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் வெளியிட்டார்.
முதலில் துவங்கும் டி20 போட்டிக்கான அணி வீரர்களை மேற்கிந்திய தீவுகள் நிர்வாகம் சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. அதில் நீண்ட இடைவேளைக்கு பிறகு, பொல்லார்ட், சுனில் நரேன் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இன்று ஒருநாள் போட்டிக்கான அணியை வேஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அதில் உலகக்கோப்பையில் சரிவர செயல்படாத மற்றும் முழு உடல்தகுதியும் பெற்றிராத மூத்த வீரர் கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
உலகக் கோப்பைப் தொடருக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடுவதாக என முதலில் அறிவித்தார் கிறிஸ் கெயில். ஆனால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என கூறி, ஓய்வு முடிவை வாபஸ் பெற்றார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற வாய்ப்பு தந்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி வாரியம்.

உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்ற சுனில் அம்ப்ரிஸ், டேரன் பிராவோ, ஆஷ்லி நர்ஸ், ஷன்னான் கேப்ரியல் ஆகியோருக்கு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல, உலகக்கோப்பையில் காயம் காரணமாக வெளியேறிய ஆண்ட்ரே ரஸ்ஸலும் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், ரஸ்ஸல் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.