புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு; அசுர வேகத்தில் முன்னேறிய ஹோல்டர்… இந்திய வீரர்கள் நிலை என்ன ..?
டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி., வெளியிட்டுள்ளது.
மூன்று மாத கால இடைவேளைக்கு பிறகு விண்டீஸ் – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் விண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது.
இந்தநிலையில், டெஸ்ட் போட்டி மற்றும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., நேற்று வெளியிட்டுள்ளது.
ஐ.சி.சி., வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலின் படி ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அதே போல் ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான லபுசேன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸே முதலிடத்தில் நீடிக்கிறார். அதே வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய விண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
32 புள்ளிகளை கூடுதலாக பெற்றதால், அவரது தரவரிசைப் புள்ளி எண்ணிக்கை 862 ஆக உயர்ந்துள்ளது. இது அவரது சிறந்த தரவரிசை மட்டுமல்ல, கடந்த 20 ஆண்டுகளில் விண்டீஸ் பந்துவீச்சாளர் ஒருவரின் அதிகபட்ச புள்ளியும் இதுதான்.
இதே டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் மேலும் 46 புள்ளிகள் பெற்று மொத்தம் 726 புள்ளிகளுடன் ஒரு இடம் உயர்ந்து 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். டாப்-10 பந்து வீச்சாளர்களில் இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே (7-வது இடம்) அங்கம் வகிக்கிறார்.