பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள்… 149 ரன்கள் குவித்தது விண்டீஸ் அணி
இந்திய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு கெய்ல் மெயர் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான பிராண்டன் கிங் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சார்லஸ் 3 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், அடுத்ததாக கூட்டணி சேர்ந்த ரோவ்மன் பவல் – நிக்கோலஸ் பூரண் ஜோடி, விண்டீஸ் அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

நிக்கோலஸ் பூரண் 34 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த போது ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரோவ்மன் பவல் 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த போது அர்ஸ்தீப் சிங்கின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் கடைசி ஓவர்களை பயன்படுத்த தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள விண்டீஸ் அணி 149 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.