ரன்கள் தேவைப்படும் நேரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்து விடுகின்றனர் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி.20 தொடரின் முதல் போட்டி 9ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ராஹ் போன்ற சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை கே.எல் ராகுல் வழிநடத்த உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில காலங்களாகவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஏன் தேவையில்லாமல் இந்த தொடரில் ஓய்வு கொடுத்தீர்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்த தொடரில் பங்கேற்பதன் மூலம் அவருடைய இழந்த பார்மை மீட்டு எடுத்துக்கொள்ளலாம் என்றும் சிலர் விவாதித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு தன்னுடைய அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “அவர்கள் நட்சத்திர வீரர்களாக உருவெடுத்து விட்டார்கள் இதனால் அவர்கள் மீது அதிக நெருக்கடி உள்ளது, ஆனால் அதை அப்படி கையாளக் கூடாது, நீங்கள் பயமில்லாமல் கிரிக்கெட் விளையாட வேண்டும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அதிரடியாக 150-160 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரர்கள், ஆனால் இந்திய அணிக்கு எப்பொழுதெல்லாம் ரன்கள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் விக்கெட்டை இழந்து வெளியேறி விடுகிறார்கள். ஆரம்பத்தில் பொறுமையாக விளையாட ஆரம்பித்தால்தான் போகப்போக ரன்கள் அடிக்க முடியும், ஆனால் அப்படி செய்யாமல் அவுட்டாகி விடுகிறார்கள், இதனால் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலையில் தள்ளப்படுகிறார்கள் என்று கபில்தேவ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.