மொயீன் அலி தன் சுயசரிதை நூலில் ஆஸ்திரேலிய வீரர்களை, அதன் ரசிகர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு வீரர் இவரை ஒசாமா என்று வர்ணித்தச் சம்பவம் தற்போது சர்ச்சையைக் கிளப்ப ஆஸ்திரேலிய அணி அதன் ரசிகர்கள் என்று மொயீன் அலி தன் நூலில் ஒருவரையும் விட்டு வைக்காமல் சாத்தியுள்ளார்.
அவரது சுயசரிதை டைம்ஸ் இதழில் தொடராக வெளி வருகிறது.
மொயீன் அலியின் தந்தை பர்மிங்ஹாமில் வசிக்கும் பாகிஸ்தானியர் தாய் பிரிட்டனைச் சேர்ந்தவர். தான் நிறவெறி ரீதியாக ஆஸ்திரேலிய ரசிகர்களால் வசைபாடப்பட்டதை நினைவு கூரும் மொயீன் அலி, கடந்த ஆஷஸ் தொடரில் ரசிகர் ஒருவர் தன்னிடம் வந்து ‘உன் கெபாப் ஷாப் எப்போது திறப்பாய்?’ என்று கேட்டதை கோபத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.
“ஆஸ்திரேலியா மிகவும் முரட்டுத் தனமான இடம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கெபாப் ஷாப் போன்ற நிறவெறி வசைகளெல்லாம் நான் கேட்டதில்லை, பயிற்சி ஆட்டங்களில் கூட இப்படிப்பட்ட வசைகளை எதிர்கொண்டேன்.
மைதானத்தில் ஆடும் ஆஸி.வீர்ர்கள் முதல், பார்வையாளர்கள் வரை எதிரணியையோ அந்நாட்டு மக்களையோ மதிப்பவர்கள் அல்ல. என்னுடைய ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே ஆஸ்திரேலிய அணியை நான் வெறுக்குமளவுக்கு வேறு அணிகளை வெறுத்ததில்லை. காரணம் அவர்கள் அப்படி தங்களை நடத்திக் கொள்கிறார்கள், வீரர்களையும் எதிரணி நாட்டின் மக்களையும் அவர்கள் மதிப்பதில்லை.
2015 உலகக்கோப்பைக்கு முன் சிட்னியில் நான் அவர்களை எதிர்த்து ஆடியபோது, அவர்கள் உங்களிடம் கடுமையாக மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வசைபாடுவார்கள். முதலில் சரி என்று விட்டு விடுவேன், ஆனால் போகப்போக அவர்கள் நடத்தை மோசமாகி வந்தது. ஆஷஸ் தொடர் என்றால் அவர்கள் மேலும் கொடூரமானவர்களாக மாறி விடுகின்றனர். தனிநபர்களாக அவர்கள் ஓகே. ஆனால் அணியாக இறங்கினால் அவ்வளவுதான்.
கடைசியாக ஆடிய ஒருநாள் தொடரில் நன்றாக நடந்து கொண்டார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் மொயின் அலி.