அடா இதான் காரணமா.. கேஎல் ராகுல் ஏன் துணைகேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்? – பிசிசிஐ தரப்பு வெளியிட்ட தகவல்!

டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டு இருக்கிறார். இது எதற்காக என்கிற தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி துவக்க வீரராக இருந்து வரும் கேஎல் ராகுல் லிமிடெட் ஓவர் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்தார். ஆனாலும் அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்புகள் கொடுத்தது.

நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்று இன்னிங்ஸ்களில் மொத்தம் 38 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். குறிப்பாக, 2வது டெஸ்டில் 115 ரன்கள் சேஸ் செய்ய வேண்டிய நேரத்தில் வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றினார்.

தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் மீது விமர்சனங்கள் முன் வைத்ததோடு, எதன் அடிப்படையில் தொடர்ந்து பிளேயிங் லெவனில் இருந்து வருகிறார் என்கிற கேள்விகளும் எழுந்தது.

இந்நிலையில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேஎல் ராகுல் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, மீண்டும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இவரிடம் இருந்த துணை கேப்டன் பொறுப்பு நீக்கப்பட்டிருக்கிறது. இதுவரை வேறு எவரையும் துணைகேப்டனாக பிசிசிஐ நியமிக்கப்படவில்லை.

முன்னதாக, இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் இருந்து வந்தார். ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரின்போது இவரிடம் இருந்த துணை கேப்டன் பொறுப்பு  ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஹார்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

எதற்காக டெஸ்ட் போட்டியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டார் என பிசிசிஐ தரப்பிலிருந்து சில தகவல்கள் வந்திருக்கிறது. “இனி டெஸ்ட் போட்டிகளுக்கு துணை கேப்டன் பொறுப்பு தேவையில்லை. முழு பொறுப்பும் ரோகித் சர்மாவிடம் கொடுத்து அவருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளது. ஆகையால் அவர் களத்தில் இருந்து வெளியேற நேரிட்டால், யார் கேப்டனாக இருந்து வழிநடத்தலாம் என்று அவரே முடிவு செய்து கொள்ளலாம்.” என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிசிசிஐ தரப்பில் இருந்து வந்த சில தகவல்களின்படி, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் வெளியாகும் நேரத்தில் யார் துணை கேப்டனாக இருப்பார்கள்? கே எல் ராகுல் அனேகமாக பிளேயிங் லெவனில் இருப்பாரா? மாட்டாரா? என்கிற சந்தேகத்தில் அவரை துணைகேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.