ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஏன் பேட்டிங் செய்ய வரவில்லை என்று பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வந்திருக்கிறது.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணிக்கு சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். இவர் 128 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து அசத்தினார் விராட் கோலி.
இந்திய அணிக்கு முதல் மூன்று விக்கெட்டுகள் விழந்த பிறகு, வழக்கமாக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார். ஆனால் இந்த இன்னிங்சில் அவருக்கு முன்னதாக ஜடேஜா களமிறங்கினார். அடுத்ததாக ஷ்ரேயாஸ் ஐயர் வந்துவிடுவார் என எதிர்பார்த்த போது, வரிசையாக கேஎஸ் பரத் அக்ஸர் பட்டேல் ஆகியோர் களமிறங்கினர்.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆயிற்று? ஏன் அவர் வழக்கமாக களமிறங்கும் இடத்தில் இன்று இறங்கவில்லை? என்று கேள்விகள் எழுந்தது.
இதற்கு அணி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து வந்த தகவலின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்யப்பட்டிருக்கிறார். துல்லியமாக ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்கேன்கள் செய்யப்பட்டு வருவதால் அவரால் களமிறங்க முடியவில்லை என்று அணி நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போதும் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு தொடர் முழுவதும் விளையாட முடியாமல் இருந்தார். அதன்பிறகு இந்த பார்டர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இரண்டாவது போட்டியிலிருந்து அணியில் தொடர்ந்தார்.
தற்போது மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டு இருப்பதால் அவர் ஆடவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஷ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். இந்திய அணி 571 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இறுதிவரை போராடிய விராட் கோலி 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்.
இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4ம் நாள் முடிய இன்னும் 8 ஓவர்கள் இருக்கின்றன. வெற்றியை நோக்கி இந்திய அணி நகருமா? என்பதையும் பார்ப்போம்.