வாய்ப்பு உன்ன தேடி வந்திருக்குடா தம்பி… இத விட நல்ல சான்ஸ் உனக்கு கண்டிப்பா கிடைக்காது; சஞ்சு சாம்சனுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த வாசிம் ஜாபர்
இந்தியா – விண்டீஸ் இடையேயான நான்காவது டி.20 போட்டி நடைபெறும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் சஞ்சு சாம்சன், சுப்மன் கில் போன்ற வீரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் விண்டீஸ் அணி 2 போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள இரு அணிகள் இடையேயான நான்காவது மற்றும் ஐந்தாவது டி.20 போட்டி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இந்திய அணி தொடரை வெல்வதற்கு எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளும் மிக முக்கியமானது என்பதால், முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதே போல் வீரர்களுக்கு தேவையான தங்களது ஆலோசனைகளையும் முன்னாள் வீரர்கள் பலர் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா – விண்டீஸ் இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், சஞ்சு சாம்சன், சுப்மன் கில் போன்ற வீரர்கள் நான்காவது போட்டியின் மூலம் தங்களது பழைய பார்மிற்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், “நான்காவது போட்டி நடைபெற இருக்கும் ப்ளோரிடா ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமானது. இந்த ஆடுகளத்தில் அதிகமான ரன்கள் குவிப்பது இலகுவானது. இதனை ஒவ்வொரு வீரர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக நல்ல பார்மில் இல்லாத சஞ்சு சாம்சன், சுப்மன் கில் போன்ற வீரர்கள் இந்த ஆடுகளத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒருவர் பேட்டிங்கில் பழைய பார்மிற்கு திரும்ப வேண்டும் என்றால் அதற்கு இதை விட சிறந்த ஆடுகளம் எங்குமே கிடைக்காது. சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரில் யார் தங்களது வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்தார்.