இதுதான் எனக்கு மனநிறைவைத் தரும் என இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. 286 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்திருந்த நிலையில், வெற்றிபெற இன்னும் 73 ரன்கள் தேவைப்பட்டது. அந்நேரத்தில், ஆஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் கட்டாயம் வென்றுவிடும் என இங்கிலாந்து ரசிகர்கள் உட்பட அனைவரும் எண்ணினர்.
ஆனால் களத்தில் நம்பிக்கை நாயகனாக பென் ஸ்டோக்ஸ் இருந்தார். தனது அதிரடியாலும் நேர்த்தியான ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளின் முடிவில் 1-1 என தொடரை சமன் செய்தது.
இறுதிவரை நின்று போராடிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அடுத்த சில நாட்களுக்கு வலைதளங்களில் இவரது பேச்சே தொடர்ந்து அடிபட்டது.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், இந்த வெற்றி நிச்சயம் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியே. ஆனால் இது ஒன்று மட்டுமே எனக்கு மனநிறைவை கொடுக்காது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரை சொந்த மண்ணில் வென்றால் மட்டுமே எனக்கு மனநிறைவாக இருக்கும். அதற்காக இறுதிவரை நிச்சயம் போராடுவேன் என்றார்.
மேலும், அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்தவரை பங்களிப்பை கொடுப்பேன். மூன்றாவது போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மக்கள் என்னை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இது அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால் மட்டுமே சாத்தியமானது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஹெட்டிங்க்லே மைதானத்தில் ஆடிய ஆட்டம் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் மனதில் இருந்து நீங்காத ஒன்றாக நிச்சயம் இருக்கும் எனவும் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டார்.