தோனி மீண்டும் அணிக்கு வருவது சாத்தியமா? – முன்னாள் தேர்வுக்குழு தலைவரின் விளக்கம்!
முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்புவதில் சாத்தியம் இருக்கிறதா என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கருத்தினை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒருநாள் போட்டிக்கான உலககோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு தோல்வியை தழுவிய பிறகு, மீண்டும் சர்வதேச இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் லிமிடட் ஓவர் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டார்.

பண்ட்டிற்கு பலவித வாய்ப்புகள் கொடுத்தபோதும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்டார். அவருக்கு பதிலாக குறைந்தபட்ச கீப்பிங் அனுபவம் கொண்டிருந்த கே எல் ராகுல் கிப்பிங் செய்ய அழைக்கப்பட்டார்.
பேட்டிங்கில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், கீழ் ஆர்டர் என அனைத்திலும் களமிறங்கி அசத்திய கேஎல் ராகுல் கீப்பிங் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ரிஷப் பண்ட் இதன்பிறகு ஓரங்கட்டப் படுவார் என்ற அளவிற்கு அவரது கீப்பிங் சிறப்பாக அமைந்தது.

இந்நிலையில் ராகுலின் இத்தகைய செயல்பாட்டிற்கு பிறகு முன்னாள் கேப்டன் தோனியின் இந்திய அணிக்குள் பிரவேசம் கேள்விக்குறி ஆகிப்போனது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது,

“கேஎல் ராகுல் லிமிடெட் ஓவர்களில் விக்கெட் கீப்பராக அசத்தியிருக்கிறார். குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் அவர் கீப்பிங் செய்தவிதம் மிகவும் சிறப்பாக இருந்தது. மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடர்களில் ஆடி இருந்தால் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும். தற்போது ஐபிஎல் தொடர் நடைபெறுவது சந்தேகம் என்பதால் தோனியின் பிரவேசம் சந்தேகமாகி உள்ளது” என்றார்.