சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுரேஷ் ரெய்னா இல்லாமல் முதல்முறையாகவும், ருத்துராஜ் கெய்க்வாட் உடன் முதல்முறையாகவும் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.
இந்த வருட ஐபிஎல் தொடர் பழைய முறைப்படி, ஹோம் மற்றும் அவே போட்டிகள் என்று நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது.
கடந்த 3 சீசன்களாக ஓப்பனிங் இறங்கி சிஎஸ்கே அணியில் கலக்கி வரும் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், 2019ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியுடன் பயணித்து வருகிறார்.
2019ஆம் ஐபிஎல் சீசனில் எடுக்கப்பட்டபோது, அந்த சீசனில் ஒரு போட்டியில்கூட விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. 2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி கட்டத்தில் சில போட்டிகள் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை அபாரமாக பயன்படுத்தி அரைசதம் விளாசியதால், 2021ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஓபனிங் செய்து வருகிறார்.
2021 சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை தட்டி சென்றது. அந்த சீசனில் ருத்துராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு தொப்பியை பெற்றார். 2022ஆம் ஆண்டு ஐபிஎல், சிஎஸ்கே அணிக்கு ஒட்டுமொத்தமாக சரியாக அமையவில்லை என்றாலும், ருத்துராஜ் மிகச்சிறப்பாக செயல்பட்டார்.
நம்பிக்கை மிக்க துவக்க வீரராக இருந்து வரும் ருத்துராஜ் இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது அதிர்ச்சிகரமாகவே இருக்கிறது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் குஜராத் அணியை அகமதாபாத்தில் எதிர்கொண்ட சிஎஸ்கே, அப்போட்டியில் தோல்வியை தழுவியது. தனது இரண்டாவது போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இதில் முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் அறிமுகமாகிறார் ருத்துராஜ்.
அதேபோல் சிஎஸ்கே அணியில் “சின்ன தல” என்று அழைக்கப்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா 2008 ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் அங்கமாகவே இருந்து வந்தார். 2021 ஆம் ஆண்டு வரை விளையாடிய இவரை கடந்த ஐபிஎல் சீசன் ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுக்கத் தவறியது. ஆகையால் வேறு எந்த அணிக்கும் ஆடமாட்டேன் என்கிற வைராக்கியத்தோடு, ஐபிஎல் உட்பட அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா இருந்திருக்கிறார். இன்று லக்னோ அணிக்கு எதிராக போட்டியில், முதல்முறையாக சுரேஷ் ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.