செமி ஃபைனல் வரும்போது இப்படி பண்றீங்களே!! தென்னாப்பிரிக்கா குறித்து கவலை தெரிவித்த மைக்கேல் வாகன்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி சுற்றில் மோதுகின்றன. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் ஃபார்ம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் கவலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மைக்கேல் வாகன் அவ்வப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்களை சீண்டும் வகையில் பதிவுகளை இடுவார்.
இதற்கு சேவாக், வாசிம் ஜாபர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சரியான பதிலடியை கொடுப்பார்கள். அந்த வகையில் மைக்கேல் வாகன் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பார். 2 நாட்களுக்கு முன்பாக விராட்கோலியை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீசை மைக்கேல் வாகன் வெளுத்து வாங்கினார். கிரிக்கெட் உலகில் வாகனின் கமென்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் ஃபார்ம் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். அந்த அணியுடன் மோதுவது பலம் மிக்க ஆஸ்திரேலியா என்பதால் தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 16 வியாழன் அன்று நடைபெறும் இந்த மேட்ச் குறித்து வாகன் கூறியதாவது-
கடந்த சில ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா மிகவும் சிரமப்பட்டுதான் வெற்றி பெறுகிறார்கள். கேப்டன் டெம்பா பவுமாவின் ஆட்டம் சுமாராக உள்ளது. எய்டன் மார்க்ரம், ஹென்ரிக் கிளாசன், டேவிட் மில்லரின் முந்தைய ஆட்டங்களுடன் ஒப்பிடுமபோது கடந்த சில ஆட்டங்களில் அவர்களின் ஃபார்ம் குறைந்ததாகவே நான் கருதுகிறேன். என்னுடைய கவலை என்னவென்றால் தென்னாப்பிரிக்காவின் முதல் 6 பேட்ஸ்மேன்கள் முன்பிருந்த ஃபார்மில் இல்லை என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.
உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. நவம்பர் 15ஆம்தேதி புதன் அன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரன போட்டியில் தோல்வியடைந்த நிலையில் நெட் ரன்ரேட்டை குறைவாக பெற்று பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.