விண்டீஸ் அணியை 3வது டி20 போட்டியில் வீழ்த்தி கோப்பையை வெல்வது முக்கியம் என பேட்டியளித்துள்ளார் துணை கேப்டன் ரோகித்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட திட்டமிடப்பட்டிருந்தது. முதல்கட்டமாக, இரு அணிகளுக்கும் இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இரண்டிலும் மோசமாக சொதப்பியதால் விண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

Photo by Vipin Pawar / Sportzpics for BCCI
தற்போது டி20 தொடர் 1-1 என சமனில் இருப்பதால், 11ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் 3வது மற்றும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இதுகுறித்து பயிற்சியை முடித்துவிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளித்தார் ரோகித் ஷர்மா. அப்போது, “நாளைய போட்டியில் வெல்வதற்கு என்ன பிளான் உள்ளது” என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்க்கு பதிலளித்த ரோகித், “சிறந்த அணி எப்போதுமே வென்றுகொண்டே இருக்கும் என கூற இயலாது. எதிரணி சிறப்பாக ஆடினால் வெற்றி அவர்கள் பக்கமும் சாயும். 3வது டி20 போட்டியில் எந்தவித திட்டமும் இல்லை.
எங்களது முழு முயற்சியை கொடுப்போம். தவறுகளை சரி செய்து வருகிறேன். அவர்கள் பாணியிலேயே பந்துவீச்சார்களின் தவறான பந்திற்கு காத்திருந்து விளாசுவது தான் தற்போதைய திட்டம்” என்றார்.