உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதி போட்டிக்கு நுழைந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக, ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணிக்கு இது நான்காவது இறுதிப் போட்டியாகும். இதற்கு முன்னர் 1979, 1987 மற்றும் 1992 ஆகிய உலககோப்பைகளில் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு சென்றிருக்கிறது. ஆனால், ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் மே 30ம் தேதி துவங்கி ஜூலை 14-ஆம் தேதியான இன்றுடன் முடிவடைய இருக்கிறது. லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு முதல் 4 இடங்கள் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டியில் பலம்மிக்க இந்திய அணியை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக நியூசிலாந்து அணி முன்னேறியது. இரண்டாவது நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து நியூசிலாந்து இரு அணிகளும் பலபரிச்சை மேற்கொள்கிறது.

இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஆதலால், இன்று வெற்றிபெறும் அணிக்கு, 44 வருட உலகக்கோப்பை வரலாற்றில் இதுவே முதல் கோப்பையாக இருக்கும்.
போட்டி இன்று மதியம் 3 மணியளவில் துவங்க இருக்கிறது.