கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முதல் இன்று வரை ரிஷப் பண்ட் நாளுக்கு நாள் தன்னுடைய நற்பெயரை சம்பாதித்துக் கொண்டு வருகிறார். ஆனால் அதற்கு முன்பு 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மிகவும் மோசமாக விளையாடி அனைவரது கோபத்திற்கும் ரிஷப் பண்ட் ஆளானர்.
ரிஷப் பண்ட் கடின உழைப்பின் மூலம் தனது உடற் தகுதியை மேம்படுத்திக் கடின பயிற்சியின் மூலம் மீண்டும் 2020 ஆம் ஆண்டு தன்னுடைய முழு ஆட்ட திறமையை காண்பித்து அனைவரிடம் இருந்து நற்பெயரை பெற ஆரம்பித்தார்.
2020 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த போட்டியில் இந்திய அணி 36 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொண்டு, சிட்னி மற்றும் காபா டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி இந்திய அணியை அவர்தான் வெற்றி அடைய செய்தார். அதன் மூலமாகவே இந்திய அணி வரலாற்று வெற்றியை ருசி பார்த்தது. அங்கு தொடங்கி சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் டி20 & ஒருநாள் தொடரிலும் தன்னுடைய முழு திறமையை காண்பித்தார். ஐபிஎல் தொடரில் கூட அவர் தன்னுடைய திறமையை காண்பிக்க தவறவில்லை.
ரிஷப் பண்ட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் ஆதரவு
ரிஷப் பண்ட் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி வர இன்னும் ஒரு சில ரசிகர்கள் அவர் எதிர்பாராத விதமாக சில கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாடி அவுட்டாகி விடுகிறார் அவரிடம் நிதானம் இல்லை என்று குறை கூறி வருகின்றார்கள். அதற்கு தக்க பதிலடி அளிக்கும் வண்ணம் பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் போல அதிரடியாக விளையாடும் ஒரு வீரர். அவரிடம் சென்று டிஃபென்ஸ் ஆட சொல்ல முடியாது.

உதாரணத்திற்கு புஜாரா டிஃபென்ஸ் விளையாடி அணிக்கு ரன் குவிப்பார். இருப்பினும் ஒரு சில சமயத்தில் அவர் அவுட் ஆகி விடுவது வழக்கமான விஷயம். அதேபோலத்தான் ரிஷப் பண்ட், அதிரடியாக விளையாடி ரன் குவித்து ஒரு சில சமயத்தில் அவரும் தன்னுடைய விக்கெட்டை இழப்பது வழக்கமான விஷயம் என்று விளக்கமளித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரிஷப் பண்ட் முக்கிய வீரராகக் கருதப்படுவார்
அவருடைய விளையாட்டு திறமை அதிரடியாக விளையாடி ரன் குவிப்பது மட்டுமே. எனவே அவர் அவருடைய போக்கில் விளையாடுவது தான் சரி என்று ரிஷப் பண்ட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் ஆதரவு அளித்துள்ளார்.
மேலும் இதே அதிரடி ஆட்டத்தை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு அவர் காண்பிப்பார் என்றும், நிச்சயமாக இந்திய அணியின் ஸ்கோரை அவரது அதிரடி ஆட்டம் உயர்த்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.