ரவி சாஸ்திரியுடன் ஹர்திக் பாண்டியாவை ஒப்பிட்டு பேசிய சுனில் கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ரவி சாஸ்திரி.
காயம் காரணமாக அவதிப்பட்டு வந்து ஹார்திக் பாண்டியா, 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டுவந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். அதன் பிறகு இந்திய அணியிலும் தொடர்ச்சியாக அபாரமான ஆட்டத்தை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் வெளிப்படுத்தி இன்றியமையாத வீரராகவும், போட்டியை வென்று தரக்கூடிய வல்லமை படைத்தவராகவும் உருவெடுத்திருக்கிறார். டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றிருக்கும் இவரை பலரும் கவனித்து வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தினார்.
இந்நிலையில் 73 வயதான சுனில் கவாஸ்கர் ஹர்திக் பாண்டியாவை ரவி சாஸ்திரியுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார். 1985 ஆம் ஆண்டு இந்திய அணி உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய தொடரையும் கைப்பற்றியது. அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக சுனில் கவாஸ்கர் இருந்தார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ரவி சாஸ்திரி. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அவர் அசத்தினார். அது போன்று டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா இருப்பார் என்று சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார். “நான் இதுகுறித்து ஏற்கனவே ட்வீட் செய்து உள்ளேன். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன். டி20 ஃபார்மெட்டில் ஹர்திக் பாண்டியா நம்பர் ஒன் ஆல்ரவுண்டர். இதற்கு மேல் என்ன வேண்டும்? நான் இரண்டு வாரங்களுக்கு முன்பே இதை கூறிவிட்டேன். கூட்டி கழித்து பார்த்தால் நான் அவரை இந்திய அணியில் பயிற்சியாளராக இருக்கும்போதிருந்தே பல வருடங்களாக கண்டு வருகிறேன். அப்போதிருந்து அவர் மீது எனக்கு தனி கவனம் இருக்கிறது. மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பாக இதை நானே முன்வந்து கூறியும் இருக்கிறேன்.” என்றார்.
1980களில் இந்திய அணிக்கு இன்றியமையாத ஆல் ரவுண்டராக திகழ்ந்து வந்த ரவி சாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் உயர்ந்தார். 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருடன் தனது பயிற்சி பொறுப்பில் இருந்து விலகினார். இவர் விலகிய பிறகு ராகுல் டிராவிட் அந்த பொறுப்பை ஏற்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.