தோனியிடம் அணியில் எந்த வீரரும், ஜூனியர், சீனியர் என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் அணுகலாம் என்று அம்பதி ராயுடு பாராட்டியுள்ளார்.
ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடருக்கான அணியில் தேர்வான அம்பதி ராயுடு, யோயோ டெஸ்டில் தோல்வி அடைந்த காரணத்தால் தொடரில் இடம் பெறவில்லை. அதேசமயம், ஆசியக் கோப்பைக்கு தேர்வாகியுள்ளார்.
ஆசியக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் வரும் 18-ம் தேதி ஹாங்காங் அணியையும், 19-ம் தேதி பாகிஸ்தானையும் இந்திய அணி சிந்திக்கிறது. மேலும், இந்தத் தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கூல் கேப்டன், அனுபவ வீரர் தோனியும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து அம்பதி ராயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் கேப்டன் விராட் கோலி இல்லாமல் இந்திய அணி களமிறங்குவது மிகப்பெரிய இழப்புதான். அதேசமயம், அவர் இல்லாவிட்டாலும்கூட, வெற்றி பெறும் அளவுக்கு திறமையைன அணியாகவே இந்திய அணி இருக்கிறது.
முன்னாள் கேப்டன் தோனி அணியில் இருப்பது மிகப்பெரிய பலம், அனைத்து வீரர்களும் ஜூனியர், சீனியர் பார்க்காமல் அணுகக்கூடிய வீரராக தோனி உள்ளார். அவரின் வழிகாட்டுதல் அணிக்கு துணை புரியும்.
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மேம்பட பல்வேறு ஆலோசனைகளை தோனி எனக்கு வழங்கியுள்ளார், அதனால்தான் கடந்த சீசனில் சிறப்பாக விளையாட முடிந்தது.
இந்திய அணியில் நடுவரிசை பேட்டிங் பலமில்லாதது போன்று கூற்று முன்வைக்கப்படுகிறது. நான் நேர்மையாகக் கூறுகிறேன், நான் எந்த வரிசையில் களமிறங்குகிறேன் என்று நான் எப்போதும் நினைத்துப் பார்க்கவில்லை ஒரு போட்டியாகவே மட்டுமே பார்க்கிறேன். என்னுடைய திறமையை வெளிப்படையாகத் தெரிவித்து, நிரூபிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பாகும். ஆதலால், எந்த வரிசையில் களமிறங்குவது குறித்து அதிகமாக சிந்தித்து எனக்குநானே அழுத்தம் கொடுக்க விரும்புவதில்லை.
நீண்ட நாட்களுக்குப் பின் அணிக்குத் திரும்பியுள்ளேன். இப்போதுநிலையில், அணியில் உள்ள எந்த வீரரும் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையைப் பற்றியாரும் சிந்திக்கவில்லை. இப்போது நாங்கள் ஆசியக்கோப்பையில் இருக்கிறோம், அதில்தான் கவனத்தை செலுத்துகிறோம். யாரும் உலகக்கோப்பை போட்டித் தொடரை பற்றி சிந்திக்கவில்லை. கவலைப்படவும் இல்லை.
நம்முடைய பரமவைரியான பாகிஸ்தான் அணியைச் சந்திக்கும் முன் ஹாங்காங் அணியுடன் விளையாடுவது நமக்கு எந்த விதத்திலும் பாதகம் இல்லை. பாகிஸ்தானுடனான நமது போட்டி மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும், இந்தப் போட்டியில் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.
இங்கிலாந்து தொடருக்குநான் தேர்வாகாமல் இருந்தது எனக்கு வேதனையை அளித்து. ஆனால், ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதைச் சிறப்பாக பயன்படுத்திக்கொள்வேன். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடினேன். என்னைப் பொருத்தவரை உடற்தகுதிக்கும், வயதுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
இவ்வாறு அம்பதி ராயுடு தெரிவித்தார்