மோசமான பார்மில் இருந்தும் ரிஷப் பண்ட் தொடர்ந்து இந்திய அணியில் இருப்பதற்கு காரணம் இது மட்டும்தான் இன்று விளக்கம் அளித்து இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆசிய கோப்பை தொடரிலும் அதன் பிறகு நடந்த டி20 தொடரிலும் சொதப்பலாக விளையாடினார். இருப்பினும் டி20 உலக கோப்பை தொடரில் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டது.
டி20 உலககோப்பையையில் முதல் நான்கு போட்டிகளில் தினேஷ் கார்த்திக் மட்டுமே களமிறங்கினார். ரிஷப் பண்ட் வெளியில் அமர்த்தப்பட்டு இருந்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் முதுகு பகுதியில் சிறிய வலி ஏற்பட்டதால், ரிஷப் பண்ட் கடைசி லீக் போட்டி மற்றும் அரை இறுதி போட்டியில் விளையாட வைக்கப்பட்டார்.
2 போட்டிகளில் கொடுக்கப்பட்ட இடத்திற்கு நியாயம் சேர்க்காமல் ரிஷப் பன்ட் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால், பலரும் இவர் மீது கடுப்பாகினர். அதன்பின் நியூசிலாந்து அணியுடன் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு கொடுத்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் வீணடித்தார்.
கொடுக்கப்படும் வாய்ப்புகளுக்கு சற்றும் பொறுப்பில்லாமல் விளையாடி வந்த இவரை இன்னும் ஏன் டீமில் வைத்திருக்கிறீர்கள் என பலரும் பல்வேறு விதமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு சக அணி வீரரான தினேஷ் கார்த்திக் சரியான பதிலை கொடுத்திருக்கிறார்.
“ரிஷப் பண்ட் டிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட காரணம் இவர் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். மற்ற வீரர்கள் சொதப்பி வந்த நேரத்தில் இவர் மட்டும் தனி ஆளாக நின்று அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக தனது சிறந்த பார்மை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் காரணமாகத்தான் அணி நிர்வாகம் இவர்மீது நம்பிக்கை வைத்து எடுத்தது.
ஒட்டுமொத்தமாக இவரை அனைவரும் விமர்சிப்பதால் வெளியில் அமர்ந்து விட முடியாது. மிகவும் இளம் வீரராகவும் இருக்கிறார். இந்திய அணியின் எதிர்கால திட்டத்திற்கு ஏற்ற வீரராகவும் இருப்பார் என்ற நம்பிக்கையில் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.”
“தொடர்ச்சியாக நிறைய போட்டிகள் அவர் விளையாடியதால் பலரும் ஒவ்வொரு போட்டிக்கும் ஒப்பீடு செய்து சரியாக விளையாடவில்லை என்று கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால் ஒருபோதும் அப்படி நடக்காது. எந்த இடத்தில் களமிறங்கினார், எந்த சூழலில் களமிறங்கினார், எப்படிப்பட்ட மைதானத்தில் களமிறங்கினார் என்பதை பொறுத்துதான் முடிவுக்கு வரவேண்டும். தேர்வுக்குழுவினர் அப்படித்தான் செயல்படுவர். ஆகையால் தான் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன என நான் நம்புகிறேன்.” என்றார்.