சிறப்பாக விளையாடுவதற்கு நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை,தீபக் ஹூடா மற்றும் கிருனாள் பாண்டியா ஆகிய இரு வீரர்களுக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் அறிவுரை.
கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் கிருனாள் பாண்டியா தன்னை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் என்னுடைய கிரிக்கெட் வாழ்கையை முடிவுக்குக் கொண்டு விடுவேன் என்று மிரட்டுவதாகவும் இளம் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா, பரோடா கிரிக்கெட் அசோசியேஷன்க்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திருந்தார்.

இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் இப்படி செய்வது நல்ல வீரருக்கு அழகல்ல என்று பண்டியா எச்சரிக்கப்பட்டார்.
இந்த நிலையில் எதிரும் புதிருமாக இருந்த இந்த இரண்டு வீரர்களையும் லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான தனது அணியில் தேர்ந்தெடுத்துள்ளது.
ஏற்கனவே மோதலில் ஈடுபட்டிருக்கும் இந்த இரண்டு வீரர்களும் ஒற்றுமையுடன்லக்னோ அணிக்கு தங்களது பங்களிப்பைக் கொடுப்பார்களா என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயின் அணியின் ஆலோசகர் கௌதம் காம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், “களத்தில் நன்றாக விளையாட வேண்டும் என்றால் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் கிடையாது, அவர்கள் இருவரும் தொழில்முறை வீரர்கள்,அவர்களுக்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். ஒரே அணியில் இருப்பதால் நண்பர்களாக ஒவ்வொரு இரவும் டின்னர் செல்வார்கள் என்று கிடையாது. நானும் பல அணிகளில் விளையாடியுள்ளேன், அனைவரிடமும் நான் நட்பாக இருந்தது கிடையாது இதனால் என் திறமைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டது கிடையாது.அனுபவம் வாய்ந்த ஒவ்வொருவருக்கும் இது நன்றாகவே தெரியும். அவர்கள் லக்னோ அணியில் தேர்வாகியுள்ளது வெற்றி பெறுவதற்காக மட்டுமே” என்று கௌதம் காம்பீர் திட்டவட்டமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.