அத பத்தி எல்லாம் 2019 உலகக்கோப்பைக்கு பிறகு தான் யோசிப்பேன்; யுவராஜ் சிங் ஓபன் டாக்
2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு தனது ஓய்வு முடிவு குறித்து அறிவிக்க உள்ளதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிக முக்கியமானவரான யுவராஜ் சிங், ஒரு காலத்தில் உலக கிரிக்கெட் அணிகளுக்கு தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சிம்ம சொப்பமான விளங்கியவர்.
ஐ.பி.எல் தொடரிலும் இவருக்கான விலை ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த முறை பஞ்சாப் அணி மீண்டும் இவரை ஏலத்தில் எடுத்தது. இந்திய அணியில் இவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் இவர் விரைவில் ஓய்வு பெறுகிறார் என்ற வதந்தியும் அவ்வப்போது பரவும்.
போதக்குறைக்கு நடப்பு ஐ.பி.எல் தொடரிலும் யுவராஜ் சிங் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை, இதன் காரணமாக யுவராஜ் சிங் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறார்.
இந்நிலையில் யுவராஜ் சிங் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகே அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது, “2000-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடி வருகிறேன். ஏறக்குறைய 17 முதல் 18 ஆண்டுகளாக விளையாடி உள்ளேன். நிச்சயமாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த முறை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவானதாக உள்ளது. எங்கள் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதுடன் கோப்பையையும் வெல்ல முடியும் என்று நம்புகிறேன். 20 ஓவர் போட்டியில் முடிவுகளை கணிக்க முடியாது.
எந்தவொரு அணியும், எந்தவொரு நாளிலும் வெற்றி பெறலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியதாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நன்றாக விளையாடி வருகிறது. ஐபிஎல் போட்டியில் இந்த இரு அணிகளும் சிறப்பானவையாகும்’ என்று தெரிவித்தார்.