இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . அதுமட்டுமன்றி கேரள அணியில் ஸ்ரீசாந்தும் சேர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதலாவதாக சையது முஷ்டாக் அலி டி20 தொடர் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த டி20 தொடருக்காக ஒவ்வொரு மாநில அணிகளும் தங்களது வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர். இன்னும் சில அணிகள் தங்களது வீரர்களை தேர்வு செய்யும் பணியில் இருக்கின்றனர்.

2021 ஐபிஎல் தொடருக்கு முன் இந்த டி20 தொடர் நடைபெறுவது, இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்குபெறும் மாநில அணிகள் தங்கள் அணியில் இடம்பெற வாய்ப்புள்ள வீரர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியின் 30 பேர் கொண்ட முதல்கட்ட வீரர்களில் இவரும் இடம்பிடித்துள்ளார். ஓய்வு பெற்ற யுவராஜ் சிங் தற்போது சையது முஷ்டாக் அலி டி20தொடரில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது யுவராஜ் சிங் பஞ்சாப் அணி வீரர்களுடன் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐ 7 வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தடை காலம் முடிவடைந்த பிறகு பிசிசிஐ நடத்தும் சையது முஷ்டாக் அலி தொடரில் ஸ்ரீசாந்த் இடம் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த டி20 போட்டிக்கான 26 பேர் கொண்ட உத்தேச கேரளா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
