ISL, Indian Super League, Kerala Blasters, Kolkata

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் போட்டிகள் இன்று கொச்சியில் கோலாகலமாக தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்சி, எப்சி புனே சிட்டி, எப்சி கோவா, நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு எப்சி, டெல்லி டைனமோஸ் ஆகிய அணிகளுடன் இம்முறை பெங்களூரு எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி ஆகிய இரு அணிகள் கூடுதலாக களமிறங்குகின்றன. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 4 மாத காலம் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 90 லீக் ஆட்டங்கள் உட்பட 95 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 17-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

புதன் முதல் சனிக்கிழமை வரையிலான ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை இரு ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மாலை 5.30 மணிக்கு முதல் ஆட்டமும், இரவு 8 மணிக்கு 2-வது ஆட்டமும் நடைபெறும். சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் வரும் 19-ம்தேதி எப்சி கோவா அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 10 கிளப்களும் இந்த சீசனுக்காக 77 சர்வதேச வீரர்கள், 166 உள்ளூர் வீரர்களை சுமார் ரூ.132.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இம்முறை விளையாடும் லெவனில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விளையாடும் லெவனில் கட்டாயம் 6 இந்திய வீரர்கள் இருக்க வேண்டும். அதிலும் ஆட்டத்தின் கடைசி வரை 6 இந்திய வீரர்கள் களத்தில் இருந்தாக வேண்டும்.

இந்த சீசனில் ஐஎஸ்எல் தொடர் புதிய வடிவம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்தத் தொடரை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளது. இதனால் ஐஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் ஏஎப்சி கோப்பை தொடரில் நேரடியாக கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறும். இந்த ஏஎப்சி கோப்பை தொடரானது ஐரோப்பிய லீக் போட்டிகளுக்கு இணையாக ஆசிய கண்டத்தில் நடைபெறும் முக்கியத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது. கடந்த ஆண்டு இந்த இரு அணிகளும் தான் இறுதிப் போட்டியில் மோதின. இதில் கொல்கத்தா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த 2014-ம் ஆண்டும் கேரளா அணியை வீழ்த்தி தான் கொல்கத்தா கோப்பையை கைப்பற்றியிருந்தது.

ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் இதுவரை 8 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 5 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தது. ஒரு ஆட்டத்தில் கேரளா வெற்றி பெற்றிருந்தது. இந்த 8 ஆட்டங்களிலும் கொல்கத்தா தரப்பில் 11 கோல்களும், கேரளா தரப்பில் 8 கோல்களும் அடிக்கப்பட்டன. 3 சீசன்களிலும் கொல்கத்தா அணி, வெளி இடங்களில் விளையாடும் முதல் ஆட்டத்தை வெற்றியுடனே தொடங்கி உள்ளது.

10 அணிகள் கலந்து கொள்ளும் ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா கொச்சியில் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா மோதல் 1

அதனால் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் அந்த அணி இந்த சீசனையும் வெற்றியுடன் தொடங்க முயற்சிக்கும். கேரளா அணியுடன் ஒப்பிடும் போது அனைத்து வகையிலும் கொல்கத்தா அணி பலமாகவே திகழ்கிறது. போட்டி நடைபெறும் கொச்சி நேரு விளையாட்டரங்கில் கொல்கத்தா அணி இதுவரை 6 கோல்கள் அடித்துள்ளது. வேறு எந்த அணியும் இங்கு இவ்வளவு அதிகமான கோல்களை அடித்தது இல்லை. மேலும் வெளி இடங்களில் நடைபெறும் ஆட்டங்களில் மற்ற அணிகளை விட கொல்கத்தா சிறப்பாக விளையாடும் திறன் கொண்டது.

கடந்த சீசனில் 7 ஆட்டத்தில் 4-ல் வெற்றியை பதிவு செய்திருந்தது. ஒரு ஆட்டத்தில் தோல்வியும், 2 ஆட்டங்களை டிராவும் செய்திருந்தது. அந்த அணிக்காக இம்முறை ராபின் சிங், யுஜென்சன், டேரன் கால்டிரியா, சங்கர் சாம்பிங்கிராஜ், கீகன் பெரிரா ஆகிய 5 இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர். இவர்கள் ஐ லீக் போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தினர். இதனால் இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

10 அணிகள் கலந்து கொள்ளும் ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா கொச்சியில் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா மோதல் 2

கேரளா அணி பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. கடந்த சீசனில் அந்த அணி சொந்த மண்ணில் நடைபெற்ற 7 லீக் ஆட்டங்களில் 5-ல் வெற்றி கண்டது. ஒரு ஆட்டத்தை டிரா செய்த நிலையில், ஒரு ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி கண்டது. நட்சத்திர வீரரான வினீத் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த சீசனில் அவர் 5 கோல்கள் அடித்திருந்தார். மேலும் கனடா வீரரான இயன் ஹூமியும் இந்த சீசனில் கேரளா அணிக்கு திரும்பி உள்ளார். முதல் சீசனில் கேரளா அணிக்காக விளையாடிய அவர் 5 கோல்கள் அடித்திருந்தார். அதன் பின்னர் கொல்கத்தா அணியில் இடம் பிடித்த அவர், 18 கோல்கள் அடித்து மிரட்டினார். தற்போது அவரது வருகை கேரள அணிக்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது.

 

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *