இந்திய அணி இறுதி போட்டிக்கு வருவது உறுதி… ஆனா சாம்பியன் பட்டத்தை வெல்ல போறது இந்த டீம் தான்; ஜேம்ஸ் ஆண்டர்சன் கணிப்பு
முன்னாள் இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன், எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல போகும் அணி குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
உலகக்கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பதால், இந்திய அணியே இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என நம்பப்படும் நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சனோ இங்கிலாந்து அணியே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். தென் ஆப்ரிக்கா அணியை பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள், ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தென் ஆப்ரிக்கா அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரையும் வென்றது. தென் ஆப்ரிக்கா அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவானதாக உள்ளது, பந்துவீச்சிலும் தென் ஆப்ரிக்கா அணி போதிய பலத்துடன் தான் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவானது தான் என்றாலும், இரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என்றே கருதுகிறேன். இறுதி போட்டிக்கு இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் முன்னேறும், இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி கடும் போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதே எனது கணிப்பு” என்று தெரிவித்தார்.