யாருக்குங்க வேணும் நம்பர் 1…? என்னோட ஒரே இலக்கு இப்ப இது மட்டும் தான்; முகமது சிராஜ் அதிரடி பேச்சு
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது மட்டுமே தற்போதைய ஒரே இலக்கு என இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவங்கிய இந்திய அணி, தனது அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா என அனைத்து அணிகளையும் மிக இலகுவாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டியிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.
அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதே தற்போதைய ஒரே இலக்கு என இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து முகமது சிராஜ் பேசுகையில், “நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது எனக்கு பெரிய விசயமாக தெரியவில்லை என்பதே உண்மை. ஏனெனில் நான் இதற்கு முன்பும் சில நாட்கள் முதல் இடத்தில் இருந்தேன், அதன்பின் தரவரிசையில் மேலும் கீழும் சென்றேன். எனவே எனது தற்போதைய ஒரே குறிக்கோள் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வது மட்டும் தான். எனது திறமையும், பங்களிப்பும் இந்திய அணிக்கு பயன்பெற்றால் மகிழ்ச்சியடைவேன். இந்திய அணி கோப்பையை வெல்ல நானும் பயனுள்ளவனாக இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.