டேவிட் மில்லர், டி காக் கிடையாது… தென் ஆப்ரிக்கா அணியின் நம்பிக்கை நாயகன் இவர் தான்; ஆகாஷ் சோப்ரா சொல்கிறார்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணியில் ஹென்ரிச் கிளாசன் பங்களிப்பு அந்த அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அடுத்த சில தினங்களில் துவங்க இருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் ஒன்றே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
பெரும்பாலான முன்னாள் வீரர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என நம்பினாலும், ஒரு சில முன்னாள் வீரர்கள் மட்டும் தென் ஆப்ரிக்கா அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம், தென் ஆப்ரிக்கா அணி அதிக ஆபத்தான அணி என எச்சரித்து வருகின்றனர்.
டேவிட் மில்லர், டி காக், கிளாசன், ரபாடா போன்ற வீரர்கள் தற்போது தென் ஆப்ரிக்கா அணியின் தூண்களாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தென் ஆப்ரிக்கா அணி 3-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது போட்டியில் இலங்கை அணியை, தென் ஆப்ரிக்கா அணி எதிர்கொள்ள இருக்கும் நிலையில், உலகக்கோப்பை ஹென்ரிச் கிளாசனின் பங்களிப்பு தென் ஆப்ரிக்கா அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் ஹென்ரிச் கிளாசன் தான் தென் ஆப்ரிக்கா அணியின் மிக முக்கியமான வீரர். அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஹென்ரிச் கிளாசனும் ஒருவர். இன்னும் சொல்ல போனால் வெளிநாட்டு வீரர்களில் கிளாசனை போன்று அதிரடியாக வேறு யாராலும் விளையாட முடியாது என்று கூட சொல்லலாம். அவரது பேட்டிங்கில் ஒரு தனித்துவம் உள்ளது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது சாதரண விசயம் கிடையாது, ஐந்து பீல்டர்களை கடந்து பவுண்டரி அடிப்பது சவாலானது. ஹென்ரிச் கிளாசனை பற்றி யாரும் பெரிதாக பேசுவது இல்லை, ஆனால் என்னை பொறுத்தவரையில் அவர் அதிக ஆபத்தான பேட்ஸ்மேன். உலகக்கோப்பை தொடரில் ஹென்ரிச் கிளாசனின் பங்களிப்பு தென் ஆப்ரிக்கா அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.