விராட் கோலி நல்ல மனுசன் தான்… ஆனா எனக்கு பிடிச்ச இரண்டு இந்திய வீரர்கள் இவர்கள் தான்; ஷாதப் கான் சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கு பிடித்த வீரர்கள் யார் என்பதை பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ஷாதப் கான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வாதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணி, அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
உலகக்கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் முதன்மையான போட்டியாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியே பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தும், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்தும் பேசிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ஷாதப் கான், இந்திய அணியில் தனக்கு பிடித்த வீரர்கள் யார் என்பதையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஷாதப் கான் பேசுகையில், “ஒரு பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரோஹித் சர்மா களத்தில் சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடிவிட்டால் அவருக்கு பந்துவீசுவதே மிக கடினம், அந்த அளவிற்கு ரோஹித் சர்மா ஆபத்தான பேட்ஸ்மேன். அதே போல் குல்தீப் யாதவைவும் எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் ஒரு லெக் ஸ்பின்னர் என்பதால் குல்தீப் யாதவின் பந்துவீச்சு முறை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.
உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி;
பாபர் அசாம், ஷாதப் கான், ஃப்கர் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லாஹ் சஃபீக், முகமது ரிஸ்வான், சவூத் சகீல், இஃப்திகார் அஹமத், சல்மான் அலி ஆகா, உஸாமா மிர், முகமது நவாஸ், ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், முகமது வாசிம் ஜூனியர், ஹசன் அலி.