பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனோயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோயும், கிடாம்பி ஸ்ரீகாந்த்-தும் விளையாடினர். இப்போட்டியிம் முதல் சுற்றை பிரனோய் 21-14 என கைப்பற்றினார். அதன்பின்னர் சுதாரிப்புடன் விளையாடிய ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றை 21-19 என கைப்பற்றினார்.
இதனால் ஆட்டம் சமனானது. மூன்றாவது சுற்று ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த சுற்றையும் ஸ்ரீகாந்த் 21-18 என கைப்பற்றினார். இதன்மூலம் 14-21, 21-19, 21-18 என்ற செட்களில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இது இந்த ஆண்டு ஸ்ரீகாந்த் விளையாட இருக்கும் மூன்றாவது சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டியாகும். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் ஜப்பானின் கெண்டா நிஷிமோட்டாவை எதிர்கொள்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பான் விராங்கனை அனேன் யமகுச்சியை எதிர்கொண்டார். இப்போட்டியில் யமகுச்சி 21-14, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதையடுத்து சிந்து இத்தொடரைவிட்டு வெளியேறினார்.