ரோகித் சர்மா ஒரு சரியான கேப்டன் இல்லை என்று கடுமையாக சாடி இருக்கிறார் அஜய் ஜடேஜா.
எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டி வரை சென்றது. அரை இறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு முதலில் பேட்டிங் செய்தது.
168 ரன்கள் அடித்தது இந்திய அணி. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துரத்திய இங்கிலாந்து அணிக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. இந்திய அணி படுமோசமாக பந்து வீசி ரன்களை வாரி கொடுத்தது.
16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து இலக்கை விக்கெட் இழப்பின்றி கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது இங்கிலாந்து. இந்த படுமோசமான தோல்வியால் இந்திய அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறி இருக்கிறது.
இதன் காரணமாக ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப், கேஎல் ராகுலின் பேட்டிங் என அனைத்தையும் வல்லுனர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு படி மேலே சென்று இந்த தோல்விக்கு முழு பொறுப்பு ரோகித் சர்மா தான் என கடுமையாக சாடியிருக்கிறார் அஜய் ஜடேஜா. அவர் கூறுகையில், “நான் சொல்லப்போகும் இந்த விஷயம் ரோகித் சர்மாவிற்கு வலியை ஏற்படலாம். ஒரு கேப்டனாக எத்தனை தொடர்கள் அவர் அணியில் இருந்திருக்கிறார். அவர் இல்லாதபோது கேஎல் ராகுல் ஒருமுறை, பும்ரா ஒருமுறை, ஹர்திக் பாண்டியா ஒருமுறை என பலரும் கேப்டன் பொறுப்பு வகித்து இருக்கின்றனர். ஏன் ஒரு சில போட்டிகளில் ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார்.
இப்படி ஒரு அணியில் 7, 8 வீரர்கள் கேப்டன் பொறுப்பில் இருந்தால் அந்த அணியால் எப்படி சரியாக செயல்பட முடியும். ஒருவர் கருத்தை மற்றொருவர் ஆதிக்கம் செலுத்த தான் முயற்சிப்பர். அந்த வகையில் ரோகித் சர்மா ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட தவறி விட்டார். அடுத்ததாக வரும் நியூசிலாந்து தொடரிலும் ரோகித் சர்மாவை நம்புவதற்கு தேர்வு குழு தயாராக இல்லை என்பதால் ஹர்திக் பாண்டியாவை நியமித்திருக்கிறது.” என்றார்.