ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஷஸ் தொடர்;
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்தே இங்கிலாந்திற்கு பெரும் தலைவலி கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 135 வருட சிறப்புமிக்க இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 14ம் தேதி மொல்போர்னில் துவங்குகிறது.
இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கு பின், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான முத்தரப்பு டி.20 தொடர் பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது.
ரிக்கி பாண்டிங் ரீ எண்ட்ரீ;
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான ரிக்கி பாண்டிங்கை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக வழக்கம் போல் டேரன் லீமேன் செயல்படுவார் என்றும், அவருக்கு டிராய் கூலி, மாத்யூ மாட் ஆகியோர் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ரிக்கி பாண்டிங் மகிழ்ச்சி;
ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய அணியுடன் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நானும் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமேனும், ஒன்றாக கிரிக்கெட் விளையாடி உள்ளோம், தற்போது நாங்கள் ஒன்றாக வேலை செய்ய உள்ளதும் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்படிருப்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான லீமேனும் வரவேற்றுள்ளார்.
மேலும் ரிக்கி பாண்டிங் மிகச்சிறந்த கிரிக்கெட் வல்லுநர் என்றும் அவருடன் பணியாற்றுவது நிச்சயம் சிறப்பாக அமையும் என்றும் லீமோன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக சிறிது காலம் பணியாற்றிய ரிக்கி பாண்டிங், தற்போது ஆஸ்திரேலிய அணிக்குள் ரீ எண்ட்ரீ கொடுத்திருப்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
2018 அதிர்ஷ்டம்;
சமீபத்தில் பிறந்த 2018ம் ஆண்டு யாருக்கு சிறப்பாக அமைந்ததோ இல்லையோ ரிக்கி பாண்டிங்கிற்கு மிக சிறப்பாக துவங்கியுள்ளது என்றே கூறலாம்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த ரிக்கி பாண்டிங், சமீபத்தில் தான் டெல்லி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அடுத்த சில தினங்களில் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருப்பது அவருக்கு இந்த வருடம் சிறப்பாக துவங்கி இருப்பதையே காட்டுகிறது.
ஆனால் ரிக்கி பாண்டிங்கின் இந்த பதவி தற்காலிகமானது தான் என்பது குறிப்பிடத்தக்கது.