வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரை எதற்காக அரஷ்தீப் கையில் கொடுத்தேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் ரோகித் சர்மா .
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணியை அடிலெய்டு மைதானத்தில் எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கே எல் ராகுல் 31 பந்துகளில் 51 ரன்கள் மற்றும் விராட் கோலி 44 பந்துகளில் 64 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்த, 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்து தனது பங்களிப்பை கொடுத்து ஆட்டம் இழந்தார் சூரியகுமார் யாதவ். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது.
வங்கதேச அணிக்கு துவக்க வீரர் லிட்டன் தாஸ், இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து, பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்தார். 21 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஏழு ஓவர்களில் 66 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி வங்கதேசம் அணி இருந்தபோது ஆட்டத்தில் மழை வந்தது.
அதன் பிறகு 16 ஓவர்கள் ஆட்டமாக மாற்றப்பட்டு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இன்னும் 54 பந்துகளில் 85 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதை சேஸ் செய்து வங்கதேச அணி எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள் என எதிர்பார்த்த போது இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டம் இழந்தனர்.
சரியான நேரத்தில் கேஎல் ராகுல் செய்த ரன் அவுட் மற்றும் 12வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வெறும் 2 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து முக்கியமான 2 விக்கெட்டுகளை எடுத்தது. 13 வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் எடுத்தது என வரிசையாக அனைத்தும் இந்திய அணி பக்கம் திரும்பியது.
கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டபோது அர்ஷதிப் சிங் பந்து வீசினார். சிறப்பாக பந்துவீசி 14 ரன்கள் விட்டுக் கொடுக்க, இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அனுபவம் மிக்க சமி இருக்கும் பொழுது, எதற்காக கடைசி ஓவர் அர்ஷதீப் சிங்கிடம் கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது? என விளக்கம் அளித்திருக்கிறார் ரோகித் சர்மா. அவர் கூறுகையில், “கடைசி ஓவரில் சமி, புவி இருவரும் இருந்தனர். அனுபவமிக்க சமிக்கு நான் கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட போட்டியில் யார் நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தவகையில், அர்ஷதிப் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு கொடுத்தோம்.
மேலும் இதற்கு முந்தைய போட்டிகளிலும் அவர் நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கிறார். பும்ரா இல்லாத இடத்தில் யாரேனும் ஒருவர் பொறுப்பை ஏற்று நன்றாக செயல்பட வேண்டும். அதை இளம் வயதில் மிகச் சிறப்பாக செய்து வரும் அர்ஷ்தீப் சிங் கடந்த 9 மாதங்களில் இந்திய அணிக்கு மிக முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
நல்ல எதிர்காலம் அவருக்கு உண்டு என நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இப்போது மீீீண்டும் ஒருமுறை கூறுகிறேன்.” என்றார்.