இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா விளையாடமாட்டாரா என்பதற்கு இன்று உடல் பரிசோதனைக்கு செல்கிறார் தென்னாபிரிக்கா கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது, இதனால் அவர் விளையாடுவாரா, விளையாடமாட்டாரா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா போட்டிக்கு முன் அவர் உடல் பரிசோதனைக்கு செல்வார் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் உறுதி செய்தது.
அப்படி உடல் பரிசோதனையில் தகுதி பெறா விட்டால், பாப் டு பிளெஸ்ஸிஸ் தான் அணியின் கேப்டனாக செயல்படுவார். ஏபி டி வில்லியர்ஸுக்கு பதிலாக பர்ஹான் பெஹார்டின் அணியில் இடம் பிடிப்பார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஏபி டி வில்லியர்ஸ் சொல்லிக்கொள்ளும் போல் விளையாடவில்லை. இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 4 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரு ‘கோல்டன் டக்’க்கும் அடங்கும். அப்படி அவர் இந்த போட்டியில் இருந்து விலகினால், அது தென்னாபிரிக்கா மணிக்குதான் பின்னடைவு. அவர், கஷ்டமான நேரங்களில் கூட அணிக்கு வெற்றி வாங்கி தரும் வீரர். இதனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் நம்புகிறது.
தென்னாபிரிக்கா அணி பயிற்சியாளரான ரஸ்ஸல் டொமிங்கோ ஏபி டி வில்லியர்ஸிடம் இருந்து ஒரு பெரிய ஆட்டத்தை எதிர்பார்ப்பதாக கூறினார்.
“ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கும் போட்டியில் அவரிடம் இருந்து பெரிய ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன். இந்த மாதிரி அணிக்கு தேவை படும் போது தான் அவர் சிறப்பாக விளையாடுவார்,” என பயிற்சியாளர் டொமிங்கோ கூறினார்.
ஜூன் 11 அன்று இந்திய அணியுடன் தென்னாபிரிக்கா மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும், அதே போல் இதே பிரிவில் நடக்கும் இன்னொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகிறது, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிதான் இந்த பிரிவில் இருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இன்னொரு பக்கம், இங்கிலாந்து அணி A பிரிவில் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதுவரை அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் மற்றும் ஒரே அணி இது தான்.