கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் யார்கர் மன்னன் மலிங்கா
இலங்கை கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் லசீத் மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரும், ஒரு காலத்தில் தனது யார்க்கர் பந்து வீச்சால் உலக கிரிக்கெட் அணிகளை பயமுறுத்தியவருமான லசீத் மலிங்கா, சமீப காலமாக இலங்கை அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற எந்த தொடரிலும் இலங்கை கிரிக்கெட் வாரியம் மலிங்காவிற்கு வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் எதிர்வரும் தொடர்களிலும் மலிங்காவின் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக மலிங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த ஊடகம் ஒன்றிற்கு மலிங்கா அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மலிங்கா கூறியதாவது “ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன். எனது தேவை அணிக்கு தேவையில்லை என்னும் பட்சத்தில் எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நான் முடிவு செய்ய வேண்டிய தருணம் இது தான். எனது கிரிக்கெட் பயணம் இன்னும் முடியவில்லை, இன்னும் இருக்கிறது, ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்தை தொடர முடியாது என்பது தெரியும். அதன் காரணமாக கிரிக்கெட் ஆலோகராகவோ, அல்லது பயிற்சியாளராகவோ மாற திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இவர் ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலத்திலும் விலை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.