பேட்டிங்கில் சொதப்பும் ருத்துராஜ்  கெய்க்வாட்... கேப்டன்சி தான் காரணமா..? வெளிப்படையாக பேசிய மைக் ஹசி !! 1
பேட்டிங்கில் சொதப்பும் ருத்துராஜ்  கெய்க்வாட்… கேப்டன்சி தான் காரணமா..? வெளிப்படையாக பேசிய மைக் ஹசி

நடப்பு ஐபிஎல் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் தடுமாறி வருவதற்கு கேப்டன்சி தான் காரணமா என்பது குறித்தான தனது கருத்தை சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த சென்னை அணியின் நட்சத்திர நாயகனான தோனி இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிக்க உள்ளார். சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி ருத்துராஜ் கெய்க்வாட்டின் ஒப்படைக்கப்பட்டது.

பேட்டிங்கில் சொதப்பும் ருத்துராஜ்  கெய்க்வாட்... கேப்டன்சி தான் காரணமா..? வெளிப்படையாக பேசிய மைக் ஹசி !! 2

ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் இரண்டு போட்டிகளிலும் மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதன்பிறகு நடைபெற்ற இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணியின் தோல்வியை விட கடந்த காலங்களில் சென்னை அணியின் வெற்றிக்கு காரணமான வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ருத்துராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் சற்று தடுமாறி வருவது சென்னை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் தடுமாறி வருவதற்கு கேப்டன் பதவி காரணமாக இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கருதி வரும் நிலையில், சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசி, ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

பேட்டிங்கில் சொதப்பும் ருத்துராஜ்  கெய்க்வாட்... கேப்டன்சி தான் காரணமா..? வெளிப்படையாக பேசிய மைக் ஹசி !! 3

இது குறித்து மைக் ஹசி பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் மிக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். கேப்டன் பதவி ருத்துராஜ் கெய்க்வாட்டை பெரிதாக மாற்றிவிடவில்லை, தற்போதும் அவர் பழையபடி தான் உள்ளார். கேப்டன் பதவி அவரிடம் எதாவது மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பதை நானும் கவனித்தேன், ஆனால் அவர் தற்போதும் அப்படியே தான் உள்ளார். ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு எங்களது முழு ஆதரவும் உள்ளது. தோனி தற்போது வரை களத்தில் ருத்துராஜ்ஜிற்கு உதவி செய்து வருகிறார். அதே போன்று ஸ்டீபன் பிளமிங், பேட்டிங் பயிற்சியாளரான நான் என ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு தேவையானதை செய்து அவருக்கு உதவியாக இருந்து வருகிறோம். அவரும் சென்னை அணிக்கான தனது பணியை மிக சிறப்பாகவே செய்து வருகிறார். களத்தில் நிதானத்துடன் செயல்படுகிறார், அவர் எடுக்கும் சில முடிவுகள், பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்தும் முறை என அனைத்தும் நன்றாகவே உள்ளது. இத்தனை நாட்கள் நான் ருத்துராஜ் கெய்க்வாட்டை பார்த்தவரையில் அவர் தனது வேலையை சிறப்பாகவே செய்து வருகிறார் என்பதே உண்மை” என்று தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *