சுயநல ரஹானே, தோனி.. சொதப்பும் யுவராஜ், ஜடேஜா.. இந்திய அணி பரிதாபம்

சென்னை: டோணியும், ரஹானேவும் தங்கள் சொந்த லாபத்திற்காக இந்திய அணியை விட்டுக்கொடுக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோஹ்லி தலைமையிலான, இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. 4வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் நிர்ணயித்த 190 ரன்களை எட்ட முடியாமல் தோற்றது இந்தியா.

இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினால், பின்வரிசை அப்படியே சரிந்துவிடுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பைனலிலும் அதுதான் நடந்தது.

டாப் ஆர்டர் மட்டுமே

ரோகித் ஷர்மா, தவான், விராட் கோஹ்லி ஆகியோர் சிறப்பாக ஆடினால் பின்வரிசை தாக்குப்பிடிக்கிறது. அவர்கள் நடையை கட்டினால், “இருங்க, நாங்களும் வந்துவிடுறோம்..” என்று சொல்லாமல் சொல்லி மற்ற பேட்ஸ்மேன்களும் நடையை கட்டுகிறார்கள்.

எதிரணிக்கும் தெரிகிறது

பாகிஸ்தான், மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் அதுதான் நடைபெற்றது. இதன் மூலம், இந்திய பேட்டிங் திறமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரும், இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக உள்ளது. அவர்களை அவுட் செய்தால் போதும் என பட்டவர்த்தனமாக கூறியுள்ளார்.

ஜடேஜா, யுவராஜ்

யுவராஜ்சிங்டோணி, ரவீந்திர ஜடேஜா, இப்படி இந்தியாவின் பின்வரிசை வீரர்களின் பெயரை சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். இவர்கள் சமீபகாலமாக ரன் குவித்ததே இல்லை என்பது அனைவருக்கும் கண்முன் வந்துபோகும். ஐபிஎல் தொடரில் இந்தியா கண்ட ரிஷப்பந்த் உட்பட பல திறமைசாலிகள் இன்னும் வெளியே உள்ளனர். ஆனால் பிசிசிஐ இன்னும் மேற்கண்ட மூத்தவர்களுக்கு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

ரஹானே பாடு திண்டாட்டம்

ரஹானே என்னதான் டெக்னிக்கலாக நல்ல பேட்ஸ்மேனாக இருந்தாலும், அவர் ரன் சேகரிப்பதில் ஸ்லோ. இதனால் ரோகித் ஷர்மா உடல் தகுதி பெற்றால் ரஹானேவுக்கு 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பதே கஷ்டமாகிவிடுகிறது. எனவே அவர் தனக்காக ரன் சேகரித்து இடத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிராக 91 பந்துகளில் அவர் 60 ரன்கள் சேகரித்தது அதற்கு ஒரு சாட்சி.

உலக கோப்பை

டோணியும் 2019 உலக கோப்பை வரை இந்திய அணியில் ஒட்டிக்கொள்ளவே விரும்புகிறார். பழைய மாதிரி அவரால் எதிரணி பந்து வீச்சை சிதறடிக்க முடியவில்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். எனவே சேஸிங் நேரங்களில், கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்துச் செல்கிறார். சில நேரங்களில் இவரால் போட்டியை பினிஷ் செய்யவும் முடியவில்லை. மே.இ.தீவுகளுக்கு எதிராக 114 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தது அதற்கு சான்று. ஓவர்களை அதிகம் எடுத்துக்கொண்டாலும் போட்டியை முடித்து வைக்காமல் அரை சதம் அடித்த திருப்தியோடு கிளம்பிவிட்டார் டோணி.

சுயநலம்

டோணி, ரஹானே இருவருக்குமே அணியில் தொடர ரன் சேகரிப்பது கட்டாயமாக உள்ளது. இதனால் இந்திய அணியின் வெற்றி இலக்கை பற்றி கவலையின்றி, தங்கள் பெயருக்கு பின்னால் ரன் இருந்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் வந்துவிட்டனர். உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்து இந்தியாவுக்கு பல வெற்றிகளை தனி ஒருவனாக நின்று பெற்றுத் தந்த டோணி, தனது வயது முதிர்வால் ஏற்பட்ட தளர்வை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று ரசிகர்கள் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.