இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத் வைட், ஷாய் ஹோப் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இது இங்கிலாந்து வீரர்களை வெறுப்படையச் செய்தது.
வெஸ்ட் இண்டீசை எளிதாக வீழ்த்தி விடலாம் என நினைத்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 101-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஷாய் ஹோப் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடும் கோபமடைந்த பென் ஸ்டோக்ஸ் ஷாய் ஹோப்பை தகாத வார்த்தைகளால் திட்டினார். இது ஸ்டம்பில் உள்ள மைக் மூலம் மேட்ச் அதிகாரிகளுக்கு தெளிவாக கேட்டது.
இதனால் பென் ஸ்டோக்ஸ் செயலுக்கு ஐ.சி.சி. கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் இரண்டு புள்ளிகள் பெற்றிருந்தார். தற்போது இந்த புள்ளியுடன் மூன்று புள்ளிகள் பெற்றுள்ளார்.
இன்னும் ஒரு புள்ளி பெற்றால் ஒரு டெஸ்டில் விளையாடுவதற்கு தடை கிடைக்கும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பென் ஸ்டோக்ஸ் கவனமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.