இங்கிலாந்து நாட்டின் டிவி நடிகை கேத்தி பிரைசின் ஊனமுற்ற மகனை கேலி செய்து வெளியிட்ட வீடியோவிற்காக கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் நைட் கிளப்பிற்கு வெளியே சண்டையில் ஈடுபட்ட வழக்கில் சிக்கினார். அந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளதால் அஷஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
தற்போது வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ளார். இங்கிலாந்தின் டிவி நடிகையும் மாடல் அழகியுமான கேத்தி பிரைசின் மகன் ஹார்வே சற்று மனநலம் குன்றியவர். அவரை கேலி செய்து பென் ஸ்டோக்ஸ் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார்.
இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்டோக்சின் நடவடிக்கை மிகவும் மோசமாக உள்ளதாக கேத்தி தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த வீடியோ பதிவு செய்ததற்கு ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். தனது டுவிட்டரில், ‘வீடியோவை தெரியாமல் பதிவு செய்துவிட்டேன். நான் செய்தது தவறு தான். என்னை மன்னித்து விடுங்கள். ஹார்வே மற்றும் அவரின் தாய் கேத்தியையோ காயப்படுத்தும் நோக்கத்தில் இதை நான் செய்யவில்லை.அவர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன்.’ என கூறினார்.
இதற்கிடையே பென் ஸ்டோக்சின் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை நியூ பேலன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.