ரோகித் சர்மா டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வந்திருக்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடர், ஆசியக்கோப்பை தொடர் இரண்டையும் இந்தியா இழந்ததால் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது அதைத்தொடர்ந்து வங்கதேசம் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இழந்தது கூடுதல் பிரச்சனையை கொடுத்திருக்கிறது.
2023 50-ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் முழுமையாக பத்து மாதங்கள் கூட இல்லை. இந்த நேரத்தில் புதிய கேப்டன் நியமிக்கப்பட்டு சிக்கலை உண்டாக்க வேண்டாம் என பிசிசிஐ அந்த முடிவை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது. ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருப்பார்.
ஆனால் 2024ல் டி20 உலகக்கோப்பை வரவுள்ளது. அதற்குள் இளம் வீரர்களைக்கொண்ட புதிய அணியை டி20 உருவாக்க பிசிசிஐ தேர்வுக்குழுவினர் இப்போது இருந்தே திட்டமிட்டு வருகின்றனர். ஏனெனில் ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்றதில்லை.
இந்த அவப்பெயரை நிறுத்த அடுத்துவரும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு திட்டங்கள் பிசிசிஐ தரப்பில் வகுக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது. மாற்றங்களை முதலாவதாக டி20 அணியில் இருந்து துவங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதிய கேப்டன் மற்றும் முற்றிலுமாக இளம் வீரர்கள் கொண்ட அணி என சிலவும் அந்தத் திட்டத்தில் அடங்குகிறது. முதல் கட்டமாக ரோகித் சர்மா டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார். ஐபிஎல் கோப்பை வென்றது இவருக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. மேலும் சமீபத்தில் நியூசிலாந்து அணியுடன் நடந்த டி20 தொடரை வென்றது இன்னும் திருப்தியை நிர்வாகத்திற்கு தந்திருப்பதால் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார்.
ஹர்திக் பண்டியாவை கேப்டனாக நியமிக்கவேண்டும் என்ற முடிவு, இரு தினங்களுக்கு முன் பிசிசிஐ மேல்மட்ட குழு கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது. அப்போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.