"பெரிய மனுஷன், பெரிய மனுஷன் தான்யா" பையன் பட்டைய கெளப்புறான்.. எங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு ஜாம்பவானா மாறுவான் - ஈகோ இல்லாமல் இளம் வீரரை பாராட்டிய வாசிம் அக்ரம்! 1

இதேபோன்று விளையாடினால் இந்திய அணியின் ஜாம்பவானாக மாறுவார் என்று இளம் வேகப்பந்துவீச்சாளரை புகழ்ந்திருக்கிறார் வாசிம் அக்ரம்.

டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவின் பந்துவீச்சு எப்படி இருக்குமோ? என்று பலரும் எண்ணி அச்சப்பட்டனர். ஏனெனில் நட்சத்திர வீரர் பும்ரா முதுகு பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டு டி20 உலக கோப்பையில் இருந்து விலகினார்.

ஆனால் அவர் இல்லாத குறையை தற்போது இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷதீப் சிங், தனது பந்துவீச்சினால் தாக்கத்தை ஏற்படுத்தி தீர்த்து வருகிறார். நான்கு போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் இவர், பவர்-பிளே ஓவரில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பந்துவீச்சில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

அர்ஷ்தீப் சிங்

மேலும் டெத் ஓவர்களிலும் ரன்களை கட்டுப்படுத்தி அசத்துகிறார். ஜம்பவான்கள் பலர் இவரை பாராட்டி வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் இவரது பந்துவீச்சை பாராட்டியது கூடுதலாக கவனம் பெற்று இருக்கிறது. ஏனெனில் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு ரோல் மாடல் வாசிம் அக்ரம் ஆவார்.

“இந்த உலகக் கோப்பையில் இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். ஆசியக் கோப்பையின்போது, நானும் வக்கார் யூனிசும் அவரது பந்துவீச்சை பற்றி தொடர்ந்து பேசினோம். பந்தை இரண்டு விதமாகவும் ஸ்விங் செய்கிறார். சரியான நேரத்தில் யார்க்கர் மற்றும் ஸ்லோ பால் வீசுகிறார்.

அர்ஷ்தீப் சிங்

வங்கதேசத்திற்கு எதிராக முக்கியமான கட்டத்தில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியது ஆட்டத்தின் போக்கையே இந்திய அணி பக்கம் திருப்பியது. மிகச் சிறந்த பந்துவீச்சாளராக வருவதற்கு அத்தனை திறமைகளும் இவரிடம் இருக்கின்றன. இதே நிலையை அவர் தொடர்ந்தால் இந்திய அணியின் ஜாம்பவானாக வளம் வருவார்.

இவரிடம் இருக்கும் சிறப்பு என்னவென்றால், ஆசிய கோப்பை தொடரில் இவரது பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். மேலும் ஃபீல்டிங்கில் இவர் கேட்ச்சை முக்கியமான கட்டத்தில் தவறவிட்டார். ஆனால் இந்த இரண்டு தவறுகளும் அவரது நம்பிக்கையை உடைக்கவில்லை. தொடர்ந்து தனது பந்துவீச்சில் கவனம் செலுத்தி அதிலே நன்றாக செயல்பட்டு வந்தார்.

அர்ஷ்தீப் சிங்

ஒருவேளை அவர் மனதளவில் அதை எடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அவரது செயல்பாட்டில் அது வெளிப்பட்டிருக்கும். அப்படி ஒன்றும் தெரியவில்லை. இளம் வயதிலேயே இந்த அளவிற்கு முதிர்ச்சியாக இருக்கிறார்.” என்று வாசிம் அக்ரம் இளம் அர்ஷதீப் சிங் பற்றி பெருமிதமாக பேசினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *