டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த எனக்கு, மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னர் ஹர்திக் பாண்டியா கூறிய சில விஷயங்கள் மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது என்று மனம்திறந்து பேசியுள்ளார் ஷுப்மன் கில்.
சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வரும் ஷுப்மன் கில்லுக்கு, இலங்கை அணியுடனான டி20 தொடரில், முதல்முறையாக டி20 போட்டிகளுக்கான அறிமுகம் கிடைத்தது.
அதன் மூலம் இந்திய அணிக்காக மூன்றுவித போட்டிகளிலும் விளையாடும் வெகுசில வீரர்களில் ஒருவராக ஷுப்மன் கில் உயர்ந்தார்.
இவருக்கு இலங்கை அணியுடனான டி20 தொடர் எதிர்பார்த்தவாறு அமையவில்லை. மூன்று போட்டிகளில் வெறும் 58 ரன்கள் மட்டுமே அடித்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் ஒருநாள் போட்டிகளை விட குறைவாக இருந்தது.
இருப்பினும் ஷுப்மன் கில் மீது நம்பிக்கை வைத்து நியூசிலாந்து டி20 தொடரிலும் ஓப்பனிங் செய்ய வாய்ப்பு கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் கில்லுக்கு சாதகமாக அமையவில்லை. 7 ரன்கள் மற்றும் 11 ரன்கள் முறையே அடித்து ஆட்டமிழந்தார்.
ஆகையால் மூன்றாவது டி20 போட்டியில் இவர் பிளேயிங் இருக்கமாட்டார். பிரிதிவி ஷா உள்ளே எடுத்து வரப்படுவார் என்றும், டி20 போட்டிகளுக்கு ஷுப்மன் கில் அணுகுமுறை சரிவராது. ஆகையால் அவர் டி20 போட்டிக்கான வீரர் அல்ல. அதிக ஓவர்கள் இருக்கக்கூடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர் என்கிற விமர்சனங்களும் வந்தன.
இருப்பினும் ஹார்திக் பாண்டியா கில் மீது அதீத நம்பிக்கை வைத்து 3வது டி20யிலும் களமிறக்கினார். இதற்கு வலுசேர்த்த ஷுப்மன் கில், தனது முதல் டி20 அரைசதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் நிற்கவில்லை. அதன்பிறகு கியரை மாற்றி சிக்ஸர்கள் பவுண்டரிகளாக விளாசி, 52 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.
போட்டி முடிவில் ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 126 ரன்கள் அடித்திருந்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்திருக்கிறார். ஆகையால் ஷுப்மன் கில் மீது சுமத்தப்பட்டு வந்த பல்வேறு விமர்சனங்களை பாராட்டுகளாகவும் மாற்றியுள்ளார்.
குறிப்பாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, கில் மீது வைத்த விமர்சனத்தை திரும்பப் பெறுவதாகவும், பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் நான் இப்படி நம்பிக்கையுடன் விளையாடியதற்கு முக்கிய காரணம் ஹார்திக் பாண்டியா தான் என்று கூறியுள்ளார் ஷுப்மன் கில். அவர் பேசியதாவது:
“நான் செய்த பயிற்சிக்கு இப்போது பலன் கிடைத்ததால் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இலங்கை டி20 தொடரில் இப்படியான ஆட்டத்தை எதிர்பார்த்தேன் நடக்கவில்லை. இந்த போட்டியில் வெளிக்கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நான் நிதானமாக துவங்கியதாக பலரும் விமர்சித்தார்கள். மேலும் டி20 போட்டிக்கு சரிவர மாட்டேன் என பேசினார்கள்.
இந்த இக்கட்டான சூழலில் ஹர்திக் பாண்டியா என் மீது நம்பிக்கை வைத்து களமிறக்கினார். மேலும் மூன்றாவது டி20 போட்டியில் களமிறங்குவதற்க்கு முன்னர், நம்பிக்கையுடன் உனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து. வேறு எதையும் வித்தியாசமாக முயற்சிக்க வேண்டாம். நான் உனக்காக இருக்கிறேன் என்று பக்கபலமாக இருப்பதை உணர்த்தினார்.
அதன்படியே நான் எனது இயல்பான ஆட்டத்தை துவக்கத்தில் வெளிப்படுத்தினேன். மைதானம் பேட்டிங் செய்வதற்கு ஏற்றவாறு மாறிய பின்பு, சிக்ஸர்கள் அடித்து வந்தேன்.” என்றார்.