அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் கொடுக்காமல் விட்டதையடுத்து ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் சொதப்ப இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தான் கடும் பதற்றமடைந்ததாக ஆஸி.கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து ரசிகர்கள் கூட்டமான பார்மி ஆர்மி ஆஸ்திரேலிய அணி 4-ம் நாள் ஆட்டத்தில் 3 பந்து இடைவெளியில் 2 ரிவியூக்களை இழக்க நேரிட்டது குறித்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட ஸ்மித் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு ஸ்மித் கூறும்போது, “கடந்த இரவு நான் தூக்கமாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. நேர்மையாகக் கூற வேண்டுமென்றால் கடந்த 24 மணிநேரம் மிகக்கடினமாக அமைந்தது. ஒருநாட்டின் கேப்டனாக இருக்கும் போது இவையெல்லாம் அதன் அங்கம்தான். கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வரும், சில வேளைகளில் தவறான முடிவுகளை எடுப்பதும் நடக்கும்.
இவையெல்லாம் கற்றுக்கொள்வதின் ஒரு அங்கம்தான். இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டேன்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டரை நாட்கள் ஆதிக்கம் செலுத்தினோம். இங்கிலாந்து மீண்டும் வெற்றி வாய்ப்புப் பாதைக்குள் நுழைய முடிந்தது. எனவே நான் உண்மையிலேயே பதற்றமடைந்தேன். அவர்கள் நன்றாக விளையாடியதாகவே நான் கருதுகிறேன், குறிப்பாக ஜோ ரூட், டேவிட் மலான். ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்பது தெரியும், ஆனால் ஜோ ரூட் ஒரு அபாயகரமான வீரர். அவர் ஆடியிருந்தால் எங்களுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்திருப்பார். அதிர்ஷ்டவசமாக அவரை வீழ்த்தினோம் மீதி வரலாறு.
ஜோஷ் ஹேசில்வுட் இன்று காலை அற்புதமாக வீசியது மகிழ்ச்சியளிக்கிறது. 180 ரன்கள் என்பது மிகப்பெரிய ரன்களாகும், அது அவ்வளவு சுலபமல்ல என்பதை அறிந்திருந்தோம். ஹேசில்வுட் லெந்த் தனித்துவமானது, ஜோ ரூட்டை வீழ்த்தியது எங்களை நல்ல நிலைக்குத் திருப்பியது. அதன் பிறகுதான் மூச்சைக் கொஞ்சம் எளிதாக விட்டேன்.
பாலோ ஆன் ஏன் கொடுக்கவில்லையெனில் நல்ல முன்னிலையில் இருந்தோம், 2-வது இன்னிங்ஸில் நன்றாக ஆடியிருந்தால் வலுவான் நிலைக்குச் செல்லலாம் என்றே நினைத்தேன். ஆனால் மோசமாக ஆடினோம். 400 ரன்கள் முன்னிலை பெற்றிருக்க வேண்டும், இருந்தாலும் நல்ல முன்னிலையில் இருந்ததால் பாலோ ஆன் தேவையில்லை என்று நினைத்தோம்.
மேலும் இது பெரிய தொடர் பவுலர்களைப் பாதுகாப்பதும் அவசியம், எனவே அவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு அளிப்பதும் முக்கியமாகப் பட்டது. மாறாக இங்கிலாந்து பவுலர்களை அதிகம் வீச வைத்தால் அவர்கள் களைப்படைவார்கள். தொடரின் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து பவுலர்களை களைப்படைய வைத்தால் தொடர் முழுதும் அது பயனளிக்கும் என்று கருதினேன்” என்றார் ஸ்மித்.