திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… அசுர வேகத்தில் முன்னேறிய ரோஹித் சர்மா; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி., வெளியிட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 20ம் தேதி துவங்க உள்ளது.
இந்தநிலையில், விண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கும் காரணமாக திகழ்ந்த ரோஹித் சர்மா மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.

ரோஹித் சர்மா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருக்கும் ஒரே பேட்ஸ்மேனும் ரோஹித் சர்மா தான். விராட் கோலி 14வது இடத்தில் உள்ளார்.
தனது முதல் போட்டியிலேயே 171 ரன்கள் அடித்து அசத்திய யசஸ்வி ஜெய்ஸ்வால், நேரடியாக 73வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தை கேன் வில்லியம்சன் தக்க வைத்து கொண்டார். இரண்டாவது இடத்தில் டர்வீஸ் ஹெட்டும், மூன்றாவது இடத்தில் பாபர் அசாமும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ரவிச்சந்திர அஸ்வின் முதல் இடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் பாட் கம்மின்ஸும், மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடாவும் உள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்திலும், ரவிச்சந்திர அஸ்வின் இரண்டாவது இடத்திலும் ஷாகிப் அல் ஹசன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.