இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இன்று இந்தியாவின் பவுலிங் ஹீிரோயினாக கலக்கி விட்டார் ஜூலன் கோஸ்வாமி. 10 ஓவர்கள் வீசிய அவர் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார். 3 மெய்டன் ஓவர்களையும் ஜூலன் வீசி இங்கிலாந்தை திணறடித்தார்.
இந்திய அணியின் சீனியர் வீராங்கனைகளில் முக்கியமானவர் ஜூலன். முன்னாள் கேப்டன். இவருக்குப் பின்னர்தான் மித்தாலி ராஜ் கேப்டனாக வந்தார். இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக திகழும் ஜூலன், உலகின் அதி வேக வேகப் பந்து வீச்சு வீராங்கனை என்ற பெருமைக்குரியவர்.
ஆல் ரவுண்டர்
சிறந்த ஆல் ரவுண்டராகவும் வலம் வரும் ஜூலன், 2006-07ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். அதுதான் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக வென்ற முதல் டெஸ்ட் தொடராகும்.
அசத்தல் பந்து வீச்சு
தற்போதைய உலகக் கோப்பைத் தொடரிலும் கூட தொடர்ந்து ஜூலன் கோஸ்வாமி சிறப்பாக ஆடி வருகிறார். இன்றைய ஆட்டத்தில் ஆரம்பத்தில் அவர் விக்கெட் எடுக்கத் திணறினாலும் கூட மெய்டன் ஓவர்களால் இங்கிலாந்து வீராங்கனைகளை தடுமாற வைத்தார்.
ஜஸ்ட் மிஸ் ஆன ஹாட்ரிக் வாய்ப்பு
ஹாட்ரிக் சாதனை படைக்கும் வாய்ப்பும் இன்று ஜூலனுக்கு கை கூடி வந்தது. ஆனால் மயிரிழையில் அது தவறிப் போனது. ஜூலன் இன்று பந்து வீசிய விதம் உண்மையிலேயே பிரமிக்க வைத்து விட்டது. இங்கிலாந்து வீராங்கனைகளை அதிரடியாக ஆட முடியாதபடி இரும்புக் கரம் கொண்டு அடக்கி விட்டார் ஜூலன்.
வேகப் புயல்
ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்களைச் சாய்த்த வீராங்கனை ஜூலன்தான். அதேபோல உலகின் அதி வேக வேகப் பந்து வீச்சு வீராங்கனையும் ஜூலன்தான்.
பாராட்டிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்!
இவரின் சிறப்பான பந்துவீச்சால், இங்கிலாந்து அணி 228 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், ஜூலன் கோஸ்வாமியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டினார்கள்.